ஆலங்கட்டி மழையால் விமானத்தின் முன்பக்கம் உடைந்த நிலையில், 227 பயணிகளுடன் பறந்த விமானம் நல்வாய்ப்பாக பத்திரமாக தரையிறங்கியது. plane broke in mid-air How 227 passengers survive?
டெல்லியில் நேற்று மாலை வீசிய புழுதிப் புயலைத் தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும் சில இடங்களில் பலத்தக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெயதது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி மாலை 5 மணியளவில் 227 பயணிகளுடன் புறப்பட்ட 6E 2142 என்ற இண்டிகோ ஏர்பஸ் விமானம் புறப்பட்டது.
அப்போது திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் விமானத்தின் முன்பகுதி (ரேடோம்) உடைந்தது. அதனால் காற்று வேகமாக நுழைய, நடுவானில் விமானம் அதிர்வடைந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.
எனினும் துரிதமாக செயல்பட்ட விமான பைலட், ஸ்ரீநகர் விமான நிலைய கன்ரோல் அறைக்கு அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி கோரினார். அதன்படி விமானம் ஸ்ரீநகரில் பத்திரமாக விமானம் தரையிறங்கியது.
எந்தவித பாதிப்புமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுதொடர்பாக விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஓவைஸ் மக்பூல் என்ற பயணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நான் விமானத்தில் இருந்தேன், டெல்லியில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன். திடீரென விமானத்தின் மூக்கு சேதமடைந்தது. பீதியும் பயணிகள் அலறினர். இது ஒரு மரண அனுபவமாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இண்டிகோ விமான நிறுவனம் இந்த விபத்து குறித்து கூறுகையில், “டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142 வழியில் திடீர் ஆலங்கட்டி மழையை சந்தித்தது. விமானம் மற்றும் கேபின் குழுவினர் பதற்றமின்றி தேவையான அறிவுறுத்தல்களை பயணிகளுக்கு வழங்கினர். விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானங்கள் வந்த பிறகு, வாடிக்கையாளர்களின் நல்வாழ்வு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளித்து விமான நிலையக் குழு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தது. தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு விமானம் மீண்டும் சேவைக்கு பயன்படுத்தப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.