அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல் முறையாக வந்த பியூஷ் கோயல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Piyush Goyal at the AIADMK Headquarters

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று (மார்ச் 23) கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று முதன்முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பியூஷ் கோயலுக்குப் பச்சை நிறப் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

ADVERTISEMENT

அவருடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர்.

மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு, 9 ஆண்டுகள் கழித்து டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானதில் இருந்து, இதுவரை நட்சத்திர ஓட்டலிலேயே ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. மேலும், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேரடியாக அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இன்று இவர்கள் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share