ஒன்றிய அரசின் நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திய முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். Pinarayi Vijayan condemned delimitation
”நம் எல்லாரையும் இங்கே கூட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு டிலிமிட்டேஷன் பற்றிய எவ்வித ஆலோசனையும் இன்றி, குறுகிய அரசியல் பார்வையோடு சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதனால், நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவமே குறையும்.
தேசிய மக்கள் தொகை கொள்கையை உண்மையிலேயே சிரமேற்கொண்டு செயல்படுத்தியதால் நாம் தண்டிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. தேசத்துக்கு நமது கடமையை உண்மையாக சரியாக செய்ததால், நாம் இன்று நமது உரிமைகள் பறிபோகும் சூழல் உருவாவதை ஏற்க இயலாது.
மக்களவை தொகுதி எல்லை நிர்ணயம் “டமோகிளஸின் வாள்” போல தென்னிந்திய மாநிலங்கள் மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசு எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த விவகாரத்தில் சில நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. பாஜக அரசின் இந்த திடீர் நடவடிக்கை அரசியலமைப்பு கொள்கைகள் அல்லது ஜனநாயக கட்டாயங்களால் இயக்கப்படவில்லை. மாறாக குறுகிய அரசியல் நலன்களால் இயக்கப்படுகிறது.
1976 மக்கள் தொகை என்பது நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளுக்கானது மட்டுமல்ல. அது நாடு முழுமைக்குமானதுதான். நமது மாநிலங்கள் அந்த கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தின. மக்கள் தொகைக் கொள்கையை சரியாக பின்பற்றியதற்காக அன்றைய ஒன்றிய அரசுகள் நம்மை திரும்பத் திரும்பப் பாராட்டின. ஆனால், அதே ஒன்றிய அரசுதான் இன்று, அந்த சாதனைக்காக இன்று நம்மை தண்டிக்கப் பார்க்கிறது.
மக்கள் தொகையை காரணம் காட்டி நமக்கான நிதியை குறைக்கிறார்கள். நமக்கான பிரதிநிதித்துவத்தையும் குறைக்கப் பார்க்கிறார்கள். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினோம், நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் செய்ததை வைத்து நம்மையே எப்படி தண்டிக்க முடியும்?
10 ஆவது நிதி கமிஷனில் கேரளாவுக்கான நிதிப் பங்கு 3.87% ஆக இருந்தது. 15 ஆவது நிதி கமிஷனில் கேரளாவுக்கான நிதிப் பங்கீடு 1.925% ஆக குறைக்கப்பட்டது. காரணம் கேரளாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால்தான்.
நமது நிதிப் பங்கீடு மட்டுமல்ல நமது அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் தொகை அடிப்படையில் குறைக்கப்பட்டால் அது வரலாறு காணாத சரிவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.
இதேபோன்ற பாதிப்பை எதிர்கொண்டிருக்கிற தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஒன்று சேர்ந்து போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை முன்னெடுத்து தொடங்கி வைத்திருக்கிறார்.
ஒன்றிய அரசு நிதிக் கொள்கையில் கை வைத்து, கலாச்சாரக் கொள்கையில் கை வைத்து, மொழிக் கொள்கையில் கை வைத்து இப்போது நமது மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையிலும் கை வைக்கத் துணிந்துவிட்டது.
கூட்டாட்சியில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சமன்பாட்டை, இந்த டிலிமிட்டேஷன் தகர்க்கிறது. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் மாநில உரிமைகளை வலியுறுத்தினார்.
ஆனால், பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக இன்றைய ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கப் பார்க்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டால் வட மாநிலங்களுக்கான இடங்கள் அதிகரிக்கும். தென் மாநிலங்களுக்கு குறைப்பு ஏற்படும். தெற்கிற்கான இத்தகைய இடக்குறைப்பு மற்றும் வடக்கிற்கான அதிகரிப்பு பாஜகவுக்கு பொருந்தும், ஏனெனில் அது வடக்கில் அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.

பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. எண்ணிக்கை மட்டுமில்லை இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேரளாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 4.92%. அதேநேரம் இந்தியாவின் சராசரி 17%. இப்படிப்பட்ட நிலையில் மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதி மறு சீரமைப்பில் கேரளா தண்டிக்கப்படும் சூழல் என்பது ஏற்க முடியாதது.
தொகுதி வரையறை என்பது அனைத்து மாநிலங்களின் கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ப்ரொ ரேட்டா என்பது தற்போதைய நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரநிநிதித்துவ சதவிகிதத்தின் அடிப்படையிலா அல்லது மக்கள் தொகை அடிப்படையிலா என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்தவில்லை.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை தேசிய அளவில் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். நமது கூட்டு முயற்சியால் வெல்வோம். கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கு ஒன்றியம் கொடுக்கும் பரிசு அல்ல. அது மாநிலங்களின் உரிமை!
நாம் கூட்டாக போராடுவது நமது எம்பிக்களின் எண்ணிக்கைக்காக மட்டுமல்ல, பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக இந்தியாவின் ஆன்மாவே இதில் அடங்கியிருக்கிறது” என்று முடித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். Pinarayi Vijayan condemned delimitation