“லீவு கிடைச்சா கோவா போலாம்” என்று சொல்லும் காலம் மலையேறிவிட்டது. 2025-ம் ஆண்டில் இந்தியப் பயணிகள் புதுமையான, அதே சமயம் பாக்கெட்டிற்குத் தோதான இடங்களைத் தேடிப் படையெடுத்துள்ளனர். கூகுள் சமீபத்தில் வெளியிட்ட 2025-ம் ஆண்டிற்கான தேடல் அறிக்கையில் (Year in Search 2025), இந்தியர்கள் அதிகம் தேடிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் வியட்நாமின் ஃபூகுவிக்(Phu Quoc), நம்ம ஊர் பாண்டிச்சேரி மற்றும் தாய்லாந்தின் புக்கெட் (Phuket) ஆகியவை ‘பிரேக்-அவுட்’ (Breakout) இடங்களாக உருவெடுத்துள்ளன.
1. ஃபூகுவிக் (Phu Quoc) – வியட்நாமின் சொர்க்கம்: இந்த வருடத்தின் ‘சூப்பர் ஸ்டார்’ இந்தத் தீவுதான். ஏன் இந்தியர்கள் இங்கே குவியறாங்க தெரியுமா?
- விசா ஃப்ரீ: இந்தியர்களுக்கு விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தங்கும் சலுகையை வியட்நாம் வழங்குகிறது. விசா செலவு மிச்சம் என்பதால் பலரின் முதல் சாய்ஸ் இதுதான்.
- அமைதி: தாய்லாந்து, பாலி போல அதிகக் கூட்ட நெரிசல் இல்லாமல், அமைதியான நீல நிறக் கடற்கரைகளும், ஆடம்பரமான ரிசார்ட்டுகளும் இங்கு மலிவு விலையில் கிடைக்கின்றன.
2. பாண்டிச்சேரி (Pondicherry) – குட்டி பிரான்ஸ்: வெளிநாடு போக நேரமில்லை என்றால், இந்தியர்களின் ‘லோக்கல’ சாய்ஸ் பாண்டிச்சேரி தான்.
- ஃபிரெஞ்ச் வைப்: வெள்ளைக்காரர் காலத்துக் கட்டிடங்கள், விதவிதமான கஃபேக்கள் (Cafes) மற்றும் கடற்கரை நடைபாதை ஆகியவை ஒரு ஐரோப்பிய ஊருக்குச் சென்ற உணர்வைத் தருகின்றன.
- ஆன்மீகம் & பார்ட்டி: ஒருபக்கம் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என்று அமைதி தேடுபவர்களுக்கும், மறுபக்கம் வீக்கெண்ட் பார்ட்டி பிரியர்களுக்கும் இது சரியான ஸ்பாட்.
3. புக்கெட் (Phuket) – தாய்லாந்தின் மகுடம்: எப்போதும் போலத் தாய்லாந்தின் புக்கெட் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
- குடும்பத்துடன் செல்பவர்களுக்குத் தீவுச் சுற்றுலாவும், இளைஞர்களுக்குத் துடிப்பான இரவு வாழ்க்கையும் (Nightlife) இங்கே அதிகம். இந்தியா – தாய்லாந்து இடையே அதிகமான நேரடி விமான சேவைகள் இருப்பதும் இதன் மவுசு குறையாததற்குக் காரணம்.
பயணிகள் கவனத்திற்கு: நீங்கள் அடுத்த ட்ரிப் பிளான் செய்கிறீர்கள் என்றால், கூட்ட நெரிசல் மிகுந்த கோவாவைத் தவிர்த்துவிட்டு, விசா தலைவலி இல்லாத ஃபூ குவிக் அல்லது பட்ஜெட்டிற்கு ஏற்ற பாண்டிச்சேரியை டிக் செய்யலாம். 2025-ன் டிரெண்டே ‘அமைதி மற்றும் புதுமை’ தான்!
