”விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு, அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் தலைவர் என ஒத்துக்கொண்டதற்காக பாமகவினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பேனரில் படம் வைப்பதால் மட்டும் அதிமுகவினரின் வாக்குகளை கைப்பற்றி விட முடியாது என்றும், அதிமுகவினர் வாக்குகளை கேட்பது பாமகவின் சந்தர்ப்பவாத அரசியல்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பா.ம.க மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி மற்றும் நாதக சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதனையடுத்து அதிமுக மற்றும் தேமுதிகவினரின் வாக்குகளை பெற பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
’அதிமுக பற்றி திட்ட வேண்டாம்’ : சீமான்
ஏற்கெனவே அதிமுகவினரின் வாக்கை கவர்வதற்காக, ”பாமகவை பற்றி திட்ட வேண்டாம், திருமாவளவன் பற்றி திட்ட வேண்டாம், அதிமுக பற்றி திட்ட வேண்டாம், மதிமுக பற்றியும் திட்ட வேண்டாம், ஸ்டாலினை பற்றி மட்டும் திட்டுங்கள். திமுக ஆட்சியின் அவலத்தை எடுத்துச் சொல்லுங்கள்” என விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
பாமக பேனரில் ஜெயலலிதா
அதற்கும் ஒரு படி மேலே சென்று அதிமுக மற்றும் தேமுதிகவினரின் வாக்குகளை கவரும் விதமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாகவே விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பாஜக கூட்டணியில் பாமக உள்ள நிலையில், அக்கட்சியின் பிரச்சார மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் மோடி, அண்ணாமலை படத்துடன் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
அதிமுக, தேமுதிகவினரிடம் நேரடியாக வாக்கு கேட்ட அன்புமணி
தொடர்ந்து நேற்று பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தான் நம்முடைய பொது எதிரி. எனவே அன்பான அதிமுக, தேமுதிக நண்பர்கள், பாமக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி வாக்களிக்க வேண்டும்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.
ஏற்கெனவே தேர்தல் புறக்கணிப்பு மூலம் பாஜக கூட்டணி வெற்றி பெற அதிமுக மறைமுகமாக உதவி செய்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரடியாகவே, அதிமுகவினரின் வாக்குகளை கேட்டிருப்பது அக்கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாமகவின் சந்தர்ப்பவாத அரசியல்!
இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்டது. எங்களை போன்று பாமக, நாம் தமிழர் கட்சியும் தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும். அதுதான் ஆளும் திமுகவிற்கும், தேர்தல் ஆணையத்திற்கு நல்ல பாடமாக இருந்திருக்கும்.
கட்சி தலைமை அறிவித்தது போன்றே அதிமுகவினரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டிய மனநிலையில் தான் இருப்பார்கள். பாமக அதிமுகவினரின் வாக்குகளை கோருவது அவர்கள் நிலைப்பாடு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜெயலலிதா மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் தலைவர். அதனை பாமகவினர் ஒத்துக்கொண்டதற்கு நன்றி. பேனரில் படம் வைப்பதால் மட்டும் அதிமுகவினரின் வாக்குகளை கைப்பற்றி விட முடியாது.
அதேநேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுகவின் நிலைப்பாடு மாறாது. இது பாமகவின் சந்தர்ப்பவாத அரசியல் என்று தான் சொல்ல வேண்டும்” என்று ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல் காந்தி போல் செயல்படாதீர்கள் : என்.டி.ஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு!