இமானுவேல் சேகரன் நினைவு தினம் : தாமதமாக வந்த ’அந்த’ 2 தலைவர்கள்!

Published On:

| By vanangamudi

photo gallery : TN leaders respect Emmanuel Sekaran's 68th anniversary

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 -ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ( செப்டம்பர் 11) கடைபிடிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தென் தமிழகத்தை பொறுத்தவரை முத்துராமலிங்க தேவர் மற்றும் இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்கள் பதற்றம் நிறைந்தவையாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இதனை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மூன்று நாள்களுக்கு முன்பே ராமநாதபுரம் சென்றுவிட்டார். எந்தெந்த பகுதியில், எந்தெந்த கட்சிகள் மற்றும் அமைப்பினர் வருகையில் கலவரம் வர வாய்ப்புண்டு, நினைவிட பகுதிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தொடர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், கூடுதல் டிஜிபி போலீசாருக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியிருந்தார். யார் யாருக்கு எங்கு பணிகள் ஒதுக்கப்பட்டதோ அங்கே மட்டுமே இருக்க வேண்டும். கூட்டத்தை சமாளிக்கும்போது கோபத்தில் வார்த்தைகளை விடாமல், மரியாதையாக அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ADVERTISEMENT

அடிதடி இல்லாமல் சுமூகமாக இந்த நிகழ்வை நடத்த வேண்டும். விஐபி வரும்போது அவர்களுக்கு போடப்பட்ட எஸ்கார்டு வாகனங்கள் சரியாக இருக்க வேண்டும். மைக் கம்யூனிகேசனை சரியாக கேட்டு பின்பற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 24 எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி உட்பட மொத்தம் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஏஎஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி தலைமையில் 43 அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள், டிரோன் மூலமும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இன்று காலை 8 மணிக்கு இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் முதலில் அவரது குடும்பத்தார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த ஊர்மக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி திமுக சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மூர்த்தி, தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தர்மர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது கட்சியினருடன் சென்று மரியாதை செலுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண் ராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியினருடன் சென்று மரியாதை செலுத்தினார்.

போலீஸ் தரப்பில் ஏற்கெனவே வழங்கியிருந்த குறிப்பிட்ட நேரத்தை கடந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும், மறைந்த தேவேந்திரர் குல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் மகள் சந்தன பிரியா ஆகியோர் தாமதமாக சென்று மரியாதை செய்தனர்.

இவர்கள் தவிர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது கட்சியின் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இரவு 8 மணிவரை இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 2000 கார்களும், 580 பேருந்துகளும் நினைவிடத்திற்கு வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share