புயல்வேக பேட்டிங்… சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி படைத்த மெகா சாதனை!

Published On:

| By christopher

phil salt destroy sa and help to eng reach 300

ENG vs SA : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா அணி.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பில்சால்ட் 19 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், 39 பந்தில் தனது அதிவேக சதத்தை பதிவு செய்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய அவர் 60 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். இதில் 15 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். இது டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.

ADVERTISEMENT

அதே போன்று மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லரும் அதிரடியாக பேட்டை சுழற்றி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 30 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹாரி ப்ரூக்கும் தன் பங்கிற்கு பேட்டை வீசி 21 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து வீரர்களின் இந்த அதிரடி பேட்டிங் காரணமாக 6 ஓவரில் 100, 13 ஓவரில் 200, ரன்களையும், 20 ஓவரில் 300 ரன்களையும் கடந்தது இங்கிலாந்து அணி. இதில் 30 பவுண்டரி மற்றும் 18 சிக்சர்கள் அடங்கும்.

தொடர்ந்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 3.4 ஓவர்களில் 50 ரன்கள் எட்டியது.

ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் படபடவென விழுந்த நிலையில், 16.1 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 41 ரன்கள் மற்றும் பிஜான் போர்டின் 32 ரன்கள் எடுத்தனர்.

14 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

வெற்றிக் கோப்பையை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share