பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு விதித்திருக்கும் தடையை பலரும் வரவேற்றுள்ளனர்.
சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதுபோன்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தடைவிதிக்க வேண்டும் என சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

கேரள காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ், ”ஆர்.எஸ்.எஸ், பி.எஃப்.ஐ இரண்டு அமைப்புகளும் ஒரே மாதிரியானவைதான். ஆகையால், அரசாங்கம் இரண்டு அமைப்புகளையுமே தடை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் “பி.எஃப்.ஐ.போல ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வெறுப்பைப் பரப்பும் அனைத்து அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும். முதலில் ஆர்.எஸ்.எஸ்ஸை தடை செய்யுங்கள்.
மோசமான அமைப்பு அது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதற்குமுன் இரண்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது. அதனை முதலில் தடை செய்தது இரும்பு மனிதர் சர்தார் படேல் என்பதை நினைவில் வைத்திருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்திருக்கும் மத்திய அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

இது புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கும் குற்றவாளிகளுக்கும் அவற்றிற்கு துணைபோகும் அமைப்புகளுக்கும் இடமில்லை.
அவர்களால் நாட்டின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல் இமாச்சல் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குரும் வரவேற்றுள்ளார். அவர், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் பயங்கரவாத நடவடிக்கைகள் வேரறுக்கப்படுகின்றன. இதுதான் புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கு இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.