வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எஃப் தொகைக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப் ) என்பது கட்டாயம்.
குறைந்தது 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு கட்டாயமாக பிஎஃப் பிடித்தம் செய்ய வேண்டும்.
அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவிகிதத்தை மாதாந்திர அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும். இதே 12 சதவிகித தொகையை ஊழியர் பணிபுரியும் நிறுவனமும் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள தொகையில் குறிப்பிட்ட அளவு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலமாக கிடைக்கும் அதிக வருவாய், வட்டி விகிதமாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் பி.எஃப் வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும். அதன்படி 2022-23ம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக இருந்த நிலையில் தற்போது 0.10% உயர்ந்துள்ளது. அதாவது 2023-24ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த வட்டி விகித உயர்வு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து EPFO வட்டி விகிதத்தை வரவிருக்கும் நிதியாண்டின் பிற்பகுதியில் அதன் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் விருப்ப வைப்பு நிதி(VPF) செலுத்துபவர்களுக்கு இந்த 8.25% வட்டி விகிதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மொத்தம் 65 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ள நிலையில் இந்த வட்டி விகித உயர்வு அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
எனினும் இதில் மகிழ்ச்சி கொள்வதற்கு ஒன்றுமில்லை என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது பி.எஃப் வட்டி விகிதம் 2018-19ஆம் நிதியாண்டில் 8.65 ஆக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு 2021-22ம் நிதியாண்டின் வட்டி விகிதம் 8.10% என அதிரடியாக குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்த 2022-23ம் நிதியாண்டில் வட்டி விகிதம் 0.05 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 8.15% ஆக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 0.10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 2023-24ஆம் நிதியாண்டுக்கு 8.25 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா