உலகளாவிய அளவில் சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்திருப்பதால் போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாகக் குறைந்து வருகிறது. ஆனால், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன.
எனவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கச்சா எண்ணெய் விலைச் சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரிய நிலையில், மத்திய அரசோ இன்று (மார்ச் 14) முதல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி அதன் மூலம் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரியை லிட்டருக்கு ரூ2 ரூபாயும், சாலை செஸ் வரி ரூ 1 ஆகவும் அரசாங்கம் அதிகரித்துள்ளது. இது இன்று (மார்ச் 14) முதல் நடைமுறைக்கு வருகிறது.
பலவீனமான வருவாயையும், ஏற்கனவே பொருளாதார மந்த நிலையிலும் தவித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு இந்த கலால் வரி உயர்வின் மூலம் கூடுதல் பணத்தை திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் கூடுதல் வருவாய் மாதத்திற்கு ரூ .2,000 கோடி என கணக்கிடப்படுகிறது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
**-வேந்தன்**