ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Kavi

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல்வேறு பொருட்களும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரப்படவில்லை.

இந்நிலையில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கனகராஜ் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைப்படி பெட்ரோல் டீசலை மத்திய அரசு ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் வரிகள் விதிக்கின்றன. இதன்மூலம் குறிப்பிடத்தக்க வருவாயை பெறுவதால், இப்பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எனவே இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு அறிவிக்கவில்லை.

பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை கணிசமாக குறையும். இதனால் மக்கள் பயன் அடைவர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன் இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு இந்திய அரசு இப்போது ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது.

குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தாலும் பெட்ரோல் டீசல் விலை அதிகளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டால் 100 ரூபாயில் இருந்து 60 முதல் 70 ரூபாயாக விலை குறையும்” என்று தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுவில் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசுத்தரப்பில், 2020ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேரள உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

மக்களே உஷார்! – சுட்டெரிக்கும் சூரியன்… வானிலை மையம் வார்னிங்!

எத்தனை டைம்தான் கல்யாணம் செஞ்சு வைப்பீங்க? நடிகை திவ்யா கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share