தேர்தலில் பயன்படுத்தப்படும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ணக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தள்ளுபடி செய்துள்ளது.
நூறு சதவிகிதம் ஒப்புகைச் சீட்டுக்களை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மைக்ரோ கன்ட்ரோலர் கண்ட்ரோலிங் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் உள்ளதா?
மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே நிரல்படுத்தக்கூடியதா? அல்லது அடுத்தடுத்து பயன்படுத்த கூடியதா?
ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எத்தனை சின்னங்களை அனுமதிக்க முடியும்?
தேர்தல் மனுக்களுக்கான வரம்பு 30 நாட்கள் என்று கூறப்பட்டது, எனவே தரவு 45 நாட்களுக்கு சேமிக்கப்படுகிறது. ஆனால் RP சட்டத்தின்படி, வரம்பு காலம் 45 நாட்கள். எனவே சேமிப்பிற்கான காலத்தை அதற்கேற்ப அதிகரிக்க வேண்டியிருக்குமா?
கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளதா அல்லது VVPAT தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளதா?” என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தேர்தல் ஆணையத்தின் பதில்!
அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், “வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளது. அவற்றை நாம் அணுக முடியாது.
மைக்ரோ கண்ட்ரோலர்களில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. தேர்தலுக்கு பிறகு மூன்று இயந்திரங்களும் சீல் வைக்கப்படும்
எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்களில் விவிபேட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி, விவிபேட் இயந்திரத்தில் 5000-க்கும் மேற்பட்ட சின்னங்களை பொருத்த முடியும்.
வாக்குப்பதிவிற்கு பிறகு இவிஎம் மெஷின் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் 45 நாட்கள் சட்டப்பூர்வமாக சேமிக்கப்படும். இந்த காலக்கெடு முடிந்ததும் தேர்தல் மனுக்கள் ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய தலைமை தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றங்களுக்கு கடிதம் எழுதுவார். இல்லையெனில் அவை சேமிப்பகத்திலிருந்து அகற்றப்படும்” என்று பதிலளித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
வழக்கு தள்ளுபடி!
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழங்கிய தீர்ப்பில், “நூறு சதவிகிதம் ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய வழக்கில் நெறிமுறைகள், தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி விரிவாக விவாதித்தோம். அதன் அடிப்படையில் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். அதோடு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது” என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்!
மேலும் அவர், “வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பதிவேற்றம் செய்யப்பட்டதும் சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு மற்றும் விவிபேட் இயந்திரத்தில் உள்ள தரவுகள் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும்.
ஒரு அமைப்பின் மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.
வாக்கு சீட்டுகளை எண்ணும் மின்னணு இயந்திரம் மற்றும் சின்னத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் பார்கோடு இருக்க முடியுமா என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்.
01.05.2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிவேற்றம் செய்ததும், சீல் செய்யப்பட்டு கொள்கலன்களில் பாதுகாக்கப்பட வேண்டும்.
வேட்பாளர் கோரிக்கை வைத்தால் 5 சதவீத இவிஎம், விவிபேட் மற்றும் கன்ரோல் யூனிட்டை ஆய்வு செய்யலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்த வேட்பாளர்கள் அத்தகைய கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
சரிபார்ப்பதற்கான அனைத்து செலவையும் கோரிக்கை விடுத்தவரே ஏற்க வேண்டும். தேர்தல் ஆணைய தொழில்நுட்ப வல்லுநரை வைத்து சரிபார்க்கலாம். சோதனையின்போது வேட்பாளர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டால், வேட்பாளரின் செலவினங்கள் திரும்பப் பெறப்படும்” என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: பிறந்தநாளில் ரக்ஷிதா சொன்ன நல்ல செய்தி… ரசிகர்கள் வாழ்த்துமழை…!
ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!