ஆ.ராசா மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மனு!

Published On:

| By Prakash

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா

ADVERTISEMENT

“நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும்வரை நீ விபச்சாரியின் மகன்.

ADVERTISEMENT

இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.

இப்போது சொல்லுங்கள், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?
எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும்” என்றார்.

ADVERTISEMENT
petition seeking action against dmk a raja

அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆ.ராசா கூறிய கருத்துக்களுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியது.

இது குறித்து ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இதில் குறிப்பாக பா.ஜ.க சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் ஆ.ராசா மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 13) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “ஆ.ராசாவின் பேச்சு இரு மதத்திற்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வழக்கத்தில் இல்லாத மனு நூல் குறித்து பேசி தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திய ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவர் மீதான புகாரை காவல் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே எனது புகாரின் பேரில் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.பிரகாஷ்

ஹிஜாப் வழக்கு கடந்து வந்த பாதை!

டிஜிட்டல் திண்ணை:  பசும்பொன்னில் மோடியா? பாஜகவுக்குள் வீசும் வாக்கு வங்கிப் புயல்!  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share