நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

நயினார்  நாகேந்திரன், ராபர்ட் புரூஸ் ஆகியோருக்கு எதிரான மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையிலிருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.3.99 கோடி எடுத்துச் சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரைத் தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் வேலை பார்த்தது தெரியவந்தது.

அதுபோன்று  நெல்லை கிழக்கு திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ரூ.28.51 பறிமுதல் செய்யப்பட்டதாக   வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன,

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் சி.எம்.ராகவன் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  நயினார் நாகேந்திரன் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோர் மீது  அமலாக்கத் துறையின் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஏப்ரல் 24)  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “பணம் பறிமுதல் தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாகக் கருத முடியாது” என்று தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணை கோரும் மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share