தமிழ்நாடு அரசின் 4 மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 7-ந் தேதி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை தாக்கல் செய்த பாஜக ஆதரவு வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்), ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தீரஜ் குமார், ஐஏஎஸ் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) மற்றும் பெ. அமுதா, ஐஏஎஸ் (அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) ஆகியோர் அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் நியமனத்துக்கு எதிராக பாஜக ஆதரவு வழக்கறிஞர் சத்யகுமார் சென்னை உயர்நீதிமன்ரத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் செய்தி தொட்டர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; இந்த நியமனம் மூலம் அரசே, ஆளும் கட்சிக்கு சாதகமான தகவல்களை மட்டும் வெளியிடும் அபாயம் உள்ளது; ஆகையால் இந்த நியமனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று சத்யகுமாரின் மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் சத்யகுமாருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.
இதேபோல ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பி சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று ஆகஸ்ட் 6-ந் தேதி டிஸ்மிஸ் செய்தது; அத்துடன் சிவி சண்முகத்துக்கு ரூ10 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
