டிஐஜி வருண்குமாருக்கு எதிரான புகார் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. Petition against DIG Varunkumar
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சாட்டை துரைமுருகன். அப்போது கலைஞர், ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அவர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்தநிலையில் ஜாமினில் வெளியே வந்த அவர், திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஆளும் கட்சியோடு சேர்ந்து டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். அவருடைய செயல் காவல்துறை விதிமுறைகளுக்கு எதிரானது.
என்னை கைது செய்தபோது எனது செல்போனில் இருந்த வீடியோ, ஆடியோ பதிவுகளை, சட்டவிரோதமாக எடுத்து வைத்துக்கொண்டு சமூக ஊடகங்களில் டிஐஜி வருண்குமார் வெளியிட்டார். எனவே டிஐஜி வருண்குமார் மற்றும் யூடியூபர் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (மார்ச் 19) நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், “ காவல் துறை உயரதிகாரி மீது, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரே புகார் கொடுப்பது ஏற்புடையது அல்ல. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி டிஐஜி வருண்குமார் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Petition against DIG Varunkumar