“வெடிச் சத்தம் கேட்டா நடுங்குது பாவம்…” – உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு ஒரு பாதுகாப்பான புத்தாண்டு!

Published On:

| By Santhosh Raj Saravanan

pet friendly new year tips dog cat safety crackers noise anxiety

நமக்கு வேண்டுமானால் புத்தாண்டு என்பது கொண்டாட்டமாக இருக்கலாம். வண்ணமயமான வாணவேடிக்கைகளும், காது கிழியும் பட்டாசு சத்தங்களும் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், நம் வீட்டில் வளரும் நாய் மற்றும் பூனைகளுக்கு? அந்த இரவு ஒரு நரகம்!

விலங்குகளின் கேட்கும் திறன் (Hearing Sense) மனிதர்களை விடப் பல மடங்கு அதிகம். நமக்குச் சாதாரணமாகத் தெரியும் சத்தம், அவற்றுக்கு இடி விழுவது போல இருக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் கூட உண்டு.

ADVERTISEMENT

இந்த புத்தாண்டில் உங்கள் செல்லப்பிராணிகளைப் பாதுகாக்கச் செய்ய வேண்டியவை என்ன?

1. வீட்டிற்குள் பாதுகாக்கவும்: டிசம்பர் 31 மாலை முதலே உங்கள் நாய் அல்லது பூனையை வீட்டிற்குள் வைத்துவிடுங்கள். மொட்டை மாடியிலோ அல்லது காம்பவுண்டிலோ கட்டாயம் விடவே கூடாது. வெடிச் சத்தம் கேட்டால் பயத்தில் அவை வீட்டை விட்டு ஓட முயற்சிக்கும். எனவே, கதவு மற்றும் ஜன்னல்களை இறுக்கமாக மூடி வையுங்கள். திரைச்சீலைகளை (Curtains) மூடி வைப்பது, ஒளியையும் சத்தத்தையும் குறைக்க உதவும்.

ADVERTISEMENT

2. தனியாக விடாதீர்கள்: இது மிக முக்கியம். ஊர் சுற்றப்போகிறேன் என்று அவைகளைத் வீட்டில் தனியாகப் பூட்டிவிட்டுச் செல்லாதீர்கள். பயத்தில் அவை நடுங்கிக்கொண்டிருக்கும்போது, நம்பிக்கையான ஒரு நபர் (நீங்கள்) அருகில் இருப்பதுதான் அவற்றுக்குத் தைரியம். அவற்றை அணைத்துக்கொண்டு, “ஒன்னும் இல்ல… பயப்படாத” என்று மெதுவாகப் பேசுங்கள். உங்கள் ஸ்பரிசம் அவற்றின் பதற்றத்தைக் குறைக்கும்.

3. சத்தத்தை மாற்றுங்கள் (Distraction): வெளியே வெடிச் சத்தம் கேட்கும்போது, வீட்டிற்குள் டிவியின் ஒலியைச் சற்று சத்தமாக வையுங்கள் அல்லது மெல்லிய இசையை ஒலிக்க விடுங்கள். இது வெளியே கேட்கும் வெடிச் சத்தத்தை மறைக்க (Masking) உதவும்.

ADVERTISEMENT

4. உணவு மற்றும் தண்ணீர்: பயத்தில் அவை சாப்பிடாது. அதனால், அவற்றுக்குப் பிடித்த பிஸ்கட் அல்லது ‘ட்ரீட்ஸ்’ (Treats) கொடுத்துத் திசை திருப்புங்கள். போதுமான தண்ணீர் வையுங்கள்.

5. அடையாள அட்டை: ஒருவேளை பயத்தில் அவை வீட்டை விட்டு ஓடிவிட்டால், மீண்டும் கண்டுபிடிக்க வசதியாக அதன் கழுத்துப்பட்டையில் (Collar) உங்கள் பெயர் மற்றும் போன் நம்பர் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

அவற்றுக்குத் தெரிந்த உலகம் நீங்கள் மட்டும்தான். “ஏன் இவ்வளவு சத்தம்?” என்று அவற்றுக்குப் புரியாது. இந்த ஒரு இரவு, கொண்டாட்டத்தைத் தவிர்த்துவிட்டு, அந்த வாயில்லா ஜீவன்களுக்குத் துணையாக இருங்கள். அதுதான் உண்மையான மனிதாபிமானம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share