தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஜெரு ஏர்வேஸ் விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.
இதில் 179 பேர் உயிரிழந்தனர். நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. இது போயிங் 737-800 ரக விமானம் ஆகும்.
இந்த விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியானார்கள். 80 வயது கொண்ட மூதாட்டியும் அவரின் மகன், மகள்,, பேரன் , பேத்திகள் என 9 பேர் இறந்தனர்.
இவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரை இழந்தார்கள்.
இந்த குடும்பத்தினர் தங்கள் வீட்டில் புட்டிங் என்ற செல்ல நாயை வளர்த்தனர். இந்த விபத்தால், தன்னை பாசத்துடன் வளர்த்த குடும்பத்தினர் அனைவரையும் இழந்தது புட்டிங். விமான விபத்தில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கில் புட்டிங் பங்கேற்றது. அப்போது, அதன் கண்களில் தாங்க முடியாத துயரத்தை காண முடிந்தது.
முன்னதாக, புட்டிங்கை வளர்த்த உறவினர்களின் சடலங்கள் வைக்கப்பட்ட இடத்துக்கும் புட்டிங் அழைத்து செல்லப்பட்டிருந்தது. அப்போது, சோகமான கண்களுடன் அவர்களை அமைதியாக பார்த்து கொண்டிருந்துள்ளது. குரைக்கவோ, சடலங்கள் மீது பாயவோ செய்யாமல் புட்டிங் அமைதியாக அவர்களை பார்த்து கொண்டிருந்துள்ளது.
விபத்து நடந்த சில நாட்களுக்குப் பிறகு புட்டிங் தன்னை வளர்த்தவர்கள் வசித்த கிராமத்தில் தனியாக சோகத்துடன் சுற்றி கொண்டிருந்தது. இதை பார்த்த ‘கேர்’ என்ற விலங்குகள் நல அமைப்பு அதை தத்தெடுத்து பராமரித்து வருகிறது. தற்போது, புட்டிங்கை யாரும் தத்தெடுத்து வளர்க்க விரும்பினால் அவர்களிடத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆளுங்கட்சி திமுக திடீர் ஆர்ப்பாட்டம்… என்ன காரணம்?
பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எத்தனை? எங்கெங்கிருந்து இயக்கம்?