பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி நடை திறந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கோயில் அர்ச்சகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல் கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Perur Temple Coimbatore
கோவையை அடுத்த பேரூரில் பழமையான பட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மர்ம மரணத்தை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு கடந்த ஞாயிறன்று இரவு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் அவர் கோயிலுக்கு வந்ததால் உயர் அதிகாரி ஒருவர் உத்தரவின் பேரில் நடையை மீண்டும் திறந்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி சிவனடியார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், இந்து முன்னணி சார்பில் இந்து சமய அறநிலையத்துறையிலும் புகார் மனு அளிக்கப்பட்டது.
மருதமலை கோவில் துணை ஆணையரும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தக்காருமான செந்தில்குமார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து எலக்ட்ரீசியன் வேல்முருகன், மற்றும் சாமிநாதன் குருக்கள் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செல்போன்களுக்கு தடை
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்லும் முன் டிக்கெட் வழங்கும் அறைக்கு எதிரில் உள்ள அறையில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை கொடுத்து விட வேண்டும். சாமி தரிசனம் முடிந்த பிறகு டோக்கனை திருப்பி கொடுத்து செல்போனை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகம விதிகளை மீறி கோயில் நடை திறக்கப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
