கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நபர், சிறிது நேரத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது.
இங்கு நேற்று (ஜூன் 12) மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அலுவலகத்துக்குள் புகுந்து உள் பக்கம் கதவை பூட்ட முயன்றுள்ளார்.
அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர் அவரை வெளியே இழுத்துச் சென்று வாகனங்கள் செல்லும் சாலையில் தள்ளிவிடும் வீடியோ பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அந்த நபர் ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். பாஜக அலுவலகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது வேறேனும் காரணமா என கோவை மாநகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோவையில் இன்று (ஜூன் 13) செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், “நேற்று மாலை எனது அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத நபர் வந்துள்ளார். அவரை எனது உதவியாளர் வெளியேற்றியுள்ளார்.
அவர் யார்? எதற்காக வந்தார்? மதுபோதையில் இருந்தாரா இல்லையா? என எதுவும் தெரியவில்லை. அவர் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி கேள்விப்பட்டேன்.
இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் அவருடைய பின்னணி, எதற்காக உள்ளே நுழைந்தார் என்ற நோக்கம் எதுவும் தெரியவில்லை.

அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்த போது நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். அதன்பின் சிலரை பார்க்க வேண்டியிருந்தது. அப்போது எனது உதவியாளர் என்னை தொடர்புகொண்டு நடந்ததை சொன்னார். உடனடியாக புகார் கொடுக்க சொன்னேன். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து நேற்றே சிஎஸ்ஆர் கொடுத்தனர். விசாரணை நடந்து வருகிறது” என்று விளக்கமளித்தார்.
பிரியா
அண்ணாமலைக்கு கண்டனத் தீர்மானம்: தானே வாசித்த எடப்பாடி
தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத் துறை ரெய்டு!

Comments are closed.