பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!

Published On:

| By christopher

காரைக்குடியில் பெரியார் சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரம் சர்ச்சையான நிலையில், நடவடிக்கை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் தான் சொந்தமாக கட்டிய புதிய வீட்டில் மார்பளவு பெரியார் சிலை நிறுவி இருந்தார்.

அதனை திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கையால் திறக்க இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையே நேற்று திடீரென வந்த மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், இளங்கோவன் வீட்டு சுற்றுச்சுவருக்குள் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை அகற்ற கூறியுள்ளனர்.

அதற்கு இளங்கோவன் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிலைக்கு முறையான அனுமதி பெற்றிருப்பதாக கூறிய இளங்கோவன், உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி அவர்களை தடுத்துள்ளார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் போலீசார் உதவியுடன் சிலையை அகற்றினர்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி இன்று காலை பேனரை திறந்து வைத்தார்.

அதில், “இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது” என்று எழுதப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், பெரியார் சிலையை அகற்றிய காவல் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். இதே இடத்தில் பெரியார் சிலையை மீண்டும் நிறுவுவோம்.

காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள். சிலையை அகற்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தர்.

இந்நிலையில் பெரியார் சிலை அகற்றலை மேற்கொண்ட அதிகாரிகள் அரசின் அதிரடி நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர்.

periyar statue issue

அதன்படி காரைக்குடி வருவாய் வட்டாட்சியரான இரா.கண்ணன் மற்றும் காரைக்குடிக்கு பொறுப்பு வகிக்கும் தேவக்கோட்டை டிஎஸ்பி கே.கணேஷ்குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

periyar statue issue

இதற்கான உத்தரவை முறையே சிவகங்கை ஆட்சியரும் மற்றும் தென்மண்டல ஐஜி ஆகியோர் பிறப்பித்துள்ளனர்.

இதனையடுத்து சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த அதே வேகத்தில், பெரியார் சிலையை இளங்கோவன் வீட்டில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கவும் பெரியாரியவாதிகள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

இலவச வேட்டி சேலை: பன்னீருக்கு அமைச்சர் கண்டனம்!

தேர்தல் கூட்டணி: திடீரென எடப்பாடியை சந்தித்த ஜிகே வாசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share