ADVERTISEMENT

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் : ஸ்டாலின் அறிவிப்பு!

Published On:

| By Kavi

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறந்து வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டத்துறைச் செயலாளரும், எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ மகள் இராகவி இளங்கோ – சச்சிந்தர் இணையரின் திருமணம் இன்று (ஆகஸ்ட் 29) நீலாங்கரையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாளைய தினம் நான் ஜெர்மனி – இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.

இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும் தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ADVERTISEMENT

இப்போது இந்தப் பயணத்தில் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்றால், அதைப்பற்றி நாளைய தினம் நான் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த விவரங்களையெல்லாம் சொல்லப்போகிறேன்.

ஆனால், அதற்கு முன்பு நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய தமிழ்ச் சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார் தான்!

ADVERTISEMENT

அதனால்தான், தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார்கள்,

“தொண்டு செய்து பழுத்த பழம்

தூய தாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக்குகையில் சிறுத்தை எழும்!” என்று எழுதினார்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.

உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியாரின் திருவுருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய திருக்கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துக்கொண்டு இருக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி – எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது!

அவர் வலியுறுத்திய, சுயமரியாதை – பகுத்தறிவு – பெண் விடுதலை – ஏற்றத்தாழ்வு மறுப்பு – தன்னம்பிக்கை – அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை!

அதற்கு முன்பு, நம்முடைய என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டுதான் அந்த பயணத்தை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share