பேராசிரியர் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு: முதல்வர்!

Published On:

| By Balaji

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நலக் குறைவால் மார்ச் 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் தனது 98 வயதில் காலமானார். அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேராசிரியருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

அவர் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பக் காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

ADVERTISEMENT

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அடியெடுத்து வைத்தவர். 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராகவும் , அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாகத் தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர். அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

அரசியல்வாதி, ஆசிரியர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்க வாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களைக் கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர். பேராசிரியர் அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share