பேரன்பும் பெருங்கோபமும்: விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

peranbum perungobamum movie review june 5

எதற்கு இந்த டைட்டில்..?!

அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு படங்களின் இயக்குனராக அறியப்படுபவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான். அவர் தன் மகன் விஜித்தை நாயகனாக அறிமுகப்படுத்தும் வகையில் இயக்கிய படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’. கடந்த ஐந்தாண்டுகளாக அப்படம் குறித்த தகவல் ஏதும் இல்லாத நிலையில், இப்போது விஜித்தை நாயகனாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படம். peranbum perungobamum movie review june 5

ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா சங்கர், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தைப் புதுமுக இயக்குனர் சிவபிரகாஷ் இயக்கியிருக்கிறார்.

’ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஆக இருக்கும்’ என்ற எதிர்பார்ப்பினைத் தந்தது இதன் ட்ரெய்லர். அப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தான் இப்படம் தருகிறதா?

சாதீயக் கிராமமொன்றில்..!

சென்னைக்கு வரும் ரயிலொன்றில் ஒரு நபரின் கால் வெட்டப்பட்ட நிலையில் இருக்கிறது. அந்த குற்றத்தைச் செய்தவர் ஒரு மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணியாற்றுபவர்.

ஆறு மாதங்களுக்கு முன்னர், தேனி வட்டாரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையைக் கடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில், அந்த மருத்துவமனையில் ஊழல் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின்றன.

மாநில சுகாதார அமைச்சரின் சொந்த ஊர் என்பதால், அவரைச் சம்பந்தப்படுத்தி அந்தச் செய்திகள் இருக்கின்றன. அது அவரது தரப்பை ஆத்திரப்படுத்துகிறது.

இந்த நிலையில், சிறையில் இருந்தவாறே அந்த அமைச்சருக்கு போன் செய்கிறார் அந்த நபர். அவரது பேச்சு அமைச்சரை எரிச்சலின் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறது.

‘யார் அந்த நபர்’ என்று விசாரிக்கச் சொல்கிறார் அமைச்சர். அப்போது, அவர் சிறையில் இருப்பதைக் கண்டறிகின்றனர் காவல் துறையினர்.

அவரது பின்னணி பற்றி விசாரிக்கையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.

அமைச்சரின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அந்த நபர். அவரது தாயார் இப்போதும் அதே ஊரில் வசித்து வருகிறார். ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை.

அந்த நபருடன் படித்தவர்கள், வேலை செய்தவர்களிடம் விசாரிக்கும்போது, அவர் மாஹேவில் கல்லூரிப்படிப்பை முடித்தது தெரிய வருகிறது. அங்கு அவர் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். அப்பெண்ணை அழைத்துக் கொண்டு தேனி சென்றது தெரிய வருகிறது.

தேனியிலுள்ள அந்த நபரின் சொந்த ஊரில் என்ன நடந்தது? அந்த அமைச்சரும் அவரது ஆட்களும் எந்த வகையில் அவரோடு சம்பந்தப்படுகின்றனர்?

இதனை விவரிக்கிறது நீண்ட பிளாஷ்பேக். அதன் முடிவில், அந்த நபர் மருத்துவமனையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டாரா, இல்லையா என்ற கேள்விக்குப் பதில் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில், அந்த நபர் தான் நாயகன் எனச் சொல்லாமலேயே புரிந்திருக்கும்.

நாயகனின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாதீய வேட்கை கொண்டவர்கள். தங்களது இளைய தலைமுறையினர் வேறு சாதி ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்தால், அவர்களை இல்லாமல் ஆக்கிவிடும் வெறி கொண்டவர்கள்.

அந்த சித்தரிப்பே, இந்தக் கதை எந்த திசை நோக்கிச் செல்கிறது என்பதைச் சொல்லிவிடும். அதையும் மீறி, கிளைமேக்ஸில் சொல்லப்படும் திருப்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.

ஆனால், அதற்கேற்றவாறு வழக்கத்திற்கு மாறான திரைக்கதை வாய்த்திருக்க வேண்டும். ‘பேரன்பும் பெருங்கோபமும்’ அதனைத் தவற விட்டிருக்கிறது.

வித்தியாசமான முயற்சி!

இந்தப் படத்தில் ஜீவா எனும் பாத்திரத்தில் விஜித் பச்சான், அவரது தாயாக சுபத்ரா ராபர்ட், அவரது காதலி சாரா ஆக ஷாலி நிவேகாஸ் நடித்துள்ளனர்.

விஜித் பச்சான் இதில் இளைஞராகவும் நடுத்தர வயதுள்ளவராகவும் தோன்றியிருக்கிறார். குறை ஏதும் இல்லை எனினும், அது முழுமையான திருப்தியைத் தருவதாக இல்லை.

ஷாலி நிவேகாஸ் அழகுப்பெண்ணாக வருகிறார். அழும் காட்சிகளில் இயல்பாகத் தெரிகிறார்.

சுபத்ரா வரும் காட்சிகள் குறைவு. அதில் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இன்னும் திரைக்கதையில் இடம் தந்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்.

இக்கதையில் அமைச்சராக மைம் கோபி, அவரது சகோதரராக அருள்தாஸ் ஆகியோர் வில்லத்தனத்தை வெளிப்படுத்துகின்றனர். தீபா சங்கர் ஓரிரு ஷாட்களில் வந்து போயிருக்கிறார்.

போலீஸ் அதிகாரிகளாக வரும் தக்‌ஷா, சாய் வினோத் மற்றும் நீதிபதியாக வரும் கீதா கைலாசம் கவனம் ஈர்க்கின்றனர்.

இது போகச் சுமார் ஒன்றரை டஜன் பேராவது இதில் தலைகாட்டியிருப்பார்கள். ஆனால், அவர்களது பாத்திரங்கள் மனதோடு ஒட்டுவது போலக் கதை சொல்லல் அமையவில்லை.

மாஹேவின் அழகைக் காட்டுகிற இடங்களில் மனம் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமார்.

காட்சிகளை ‘கட்’ செய்த வகையில் குறை சொல்ல முடியாவிட்டாலும், இயக்குனரின் திரைக்கதைக்கேற்ப அவற்றை அடுக்கிய வகையில் ஏமாற்றம் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.

திரைக்கதையின் தொடக்கமும் நகர்வும் இறுதி முடிவும் ஒரு கோர்வையாக அமையாததைக் கவனித்திருக்கலாம்.

இது போக கலை இயக்குனர் சரவணன், ஒலிக்கலவையாளர் தபஸ் நாயக் உட்படப் பலரது தொழில்நுட்பப் பங்களிப்பு இப்படத்தில் இருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் சிவபிரகாஷ், வழக்கமான சாதி மோதல் கதைகளிலிருந்து விலகி ஒரு படைப்பைத் தர முனைந்திருக்கிறார். அதற்கேற்ற கதையையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். உண்மையிலேயே அவரது முயற்சி வித்தியாசமானது தான்.

ஆனால், திரையில் அவர் கதையைச் சொல்லியிருக்கும் விதம் திருப்திகரமாக இல்லை. கொஞ்சமாகப் பட்டை தீட்டியிருந்தாலும் வைரமாக ஜொலிக்கிற வாய்ப்புகள் அனேகம் இருந்தும், அதனைத் தவறவிட்டிருப்பதே நமது வருத்தம்.

’நான் லீனியர்’ முறையில் கதை சொல்லியிருந்தாலோ அல்லது பிளாஷ்பேக்கை சுருக்கி இரண்டாம் பாதியில் இடம்பெறச் செய்திருந்தாலோ வேறுவிதமான தாக்கம் நமக்குக் கிடைத்திருக்கலாம். ஏனென்றால், ‘கமர்ஷியல் பட பேக்கேஜில்’ அமைந்த இது போன்ற கதைகள் அப்படிப்பட்ட அனுபவத்தையே நமக்கு இதுவரை தந்திருக்கின்றன. அதிலிருந்து விலக இயக்குனர் முயற்சித்தது சரிவரக் கைவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படத்திற்கு ‘பேரன்பும் பெருங்கோபமும்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை நியாயப்படுத்துகிற வகையில் நாயகனின் பாத்திர வார்ப்பு உள்ளது. ஆனால், திரையில் அதனை வெளிப்படுத்த வாய்ப்பே தரப்படவில்லை.

’டைட்டிலை பார்த்துவிட்டு இது போல கதை இருக்குமோ’ எனக் கற்பனைகளுடன் வருபவர்களுக்கு ஏமாற்றமே கிடைக்கும். அதனால், படம் முடிந்து வெளியே வருகையில் ‘எதற்கு இந்த டைட்டில்’ என்ற கேள்வியே மனதில் மிச்சமிருக்கும்.

அது போன்ற குறைகளைத் தொடக்கத்திலேயே யூகித்து, படப்பிடிப்புக்கு முன்னதாகவே திரைக்கதையைச் செழுமைப்படுத்தியிருந்தால் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ நம் மனதுக்கு நெருக்கமாகியிருக்கும். இப்போது, ஒரு வித்தியாசமான சிந்தனை என்றளவிலேயே நம் ரசனையைத் தொட்டிருக்கிறது..! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share