ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலுவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது துர்கா தேவியின் 9 வடிவங்களை வழிபடுவது வழக்கம். வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு வைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நவராத்திரி கொலுவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை ஆளுநர் மாளிகையில், ‘நவராத்திரி கொலு – 2023’ அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24, 2023 வரை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15 அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் ‘நவராத்திரி கொலு’ கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் மனதார வரவேற்கப்படுகிறார்கள்.
நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு (‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில்) அனுமதி அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும்.
பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண். 2 இல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆவணத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.
வெளிநாட்டு பிரஜைகளும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்பேசி மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது.
நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை சென்னை ஆளுநர் மாளிகைக்கு உண்டு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நியூஸ்க்ளிக் நிறுவனத்தில் சிபிஐ சோதனை!
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: ED -க்கு அவகாசம் தந்த உயர்நீதிமன்றம்!