சிறப்புக் கட்டுரை: வாங்க பழகலாம் வைரஸோடு வாழ!

Published On:

| By Balaji

அ.குமரேசன்

ஊரடங்கு கெடுபிடிகள், அமலாக்குவதில் ஏற்பட்ட அபத்தங்கள், ஆங்காங்கே நடந்த அத்துமீறல்கள், மக்களின் அவதிகள், புலம்பெயர்ந்தோரின் அவலங்கள், உலக அளவில் பாதிக்கப்பட்டோர் புள்ளிவிவரங்கள், பலியானோர் விகிதங்கள், இதுவரையில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள், இனிமேல் ஏற்படக்கூடிய சமூகப் பின்னடைவு பற்றிய கவலைகள் என்ற பின்னணிகளில் ஏற்கெனவே சிலர் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். கொரோனா கிருமியோடு நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்துதான் அது. இப்போது அது மத்திய அரசாங்கத்திடமிருந்தே வந்திருக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் வெள்ளியன்று (மே 8) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார். மாவட்டங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தெரிவித்துவிட்டு, “செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றிய பரிந்துரைகளைப் பின்பற்றினால் கோவிட்-19 நோய் உச்சத்துக்குச் செல்வதைத் தவிர்க்க முடியும். ஊரடங்குத் தளர்வுகள் பற்றியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர் திரும்புவது பற்றியும் நாம் பேசிக்கொண்டிருக்கிறபோது, நம் முன்னால் ஒரு பெரிய சவால் ஏற்பட்டிருக்கிறது – இந்தக் கிருமியோடு வாழ நாம் பழகிக்கொள்வதுதான் அந்தச் சவால்” என்று கூறியிருக்கிறார்.

“கிருமியோடு வாழப் பழகுவது பற்றிப் பேசுகிறபோது, அதனிடமிருந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றுவதற்கான வழிகாட்டல்கள் சமூகத்தில் ஒரு நடத்தை மாற்றம் போல கடைப்பிடிக்கப்படுவது முக்கியம்” என்றும் கூறியிருக்கிறார் இணைச்செயலர்.

பொருளென்ன?

கிருமியோடு வாழப் பழகுகிறோமோ இல்லையோ, ஊரடங்கோடு வாழ யாரும் விரும்ப மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனால் இணைச்செயலர் கூறுவதன் மையப்பொருள் என்ன? இது அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடா அல்லது அதிகாரியின் சொந்தக் கருத்தா? அரசாங்கம் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறதா அல்லது மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு வெள்ளோட்டம் விடப்படுகிறதா? இது அறிவியல்பூர்வமான ஆலோசனைப் பெற்று முன்வைக்கப்படுகிற அறிவுரையா அல்லது அதிகாரவர்க்க வட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா?

இந்த சந்தேகங்கள் ஏன் ஏற்படுகின்றன? ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்ட தொடக்க நாட்களில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அறிவியலாளர்களும் பங்கேற்றார்கள். ஐசிஎம்ஆர் உள்ளிட்ட ஆராய்ச்சி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள். அது, தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படாத, ஒரு புதிய கிருமியின் பரவலைத் தடுக்க ஒரு குறைந்தபட்ச அறிவியல்பூர்வ வழிமுறைதான் ஊரடங்கும் சமூக விலகலும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின. பின்னர் தற்போதைய செய்தியாளர் சந்திப்புகளில் அப்படிப்பட்ட அறிவியலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் யாரையும் காணோமே?

கிடைத்த அவகாசத்தில்…

ஊரடங்கு நடவடிக்கை கொரோனா போராட்டத்தில் நாட்டின் முழு வலிமையையும் ஒன்று திரட்டுவதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தைப் பெறுவதற்கான வழியே. அது, கிருமியை நெருங்கவிடாமல் தள்ளியிருக்க உதவுகிற ஒரு வியூகம்தானேயன்றி அதுவே கிருமியை வீழ்த்துகிற ஆயுதமாகிவிடாது. இந்த நியாயங்களை ஏற்கிற அதே நேரத்தில், பெறப்பட்ட காலத்தில் நாட்டின் முழு வலிமையையும் ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்ல முடியுமா? அரசாங்கத்தின் அதிகார வலிமையைப் பெருக்கிக்கொள்வதை நாட்டின் வலிமை திரட்டப்பட்டதாக ஏற்க முடியுமா?

கார்ப்பரேட்டுகளுக்கான வரி நிலுவைத் தள்ளுபடியோ, தள்ளிவைப்போ அதை அறிவிக்கத் தயக்கமில்லை. ஆனால், அந்த நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கான வேலை/ஊதிய பாதுகாப்புக்குக் கறாரான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. இப்போது “வேலையளிப்போர்” அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்திய அரசாங்கத்துடன் நடத்திய காணொலி வழி கலந்தாய்வில், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இது பற்றி மத்திய அரசாங்கம் முடிவு எதையும் அறிவிப்பதற்கு முன்பே உ.பி., ம.பி. மாநிலங்களில் தொழில்/ வணிக நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களுக்கு உட்படத் தேவையில்லை என்று அவசரச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்த நிறுவனங்களைச் சேர்ந்த முறைசார் தொழிலாளர்களைக் கைவிடுவதுதான் நாட்டின் வலிமையைத் திரட்டுகிற வழியா? முறைசாராத் தொழிலாளர்கள் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. இது நம்நாடு என்ற நம்பிக்கையுடன் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கோ, நாடு நம்மைக் கைவிட்டுவிட்டதே என்ற ஆற்ற முடியாத வலியுடன் கால்நடையாகவே ஊர் திரும்புகிற கட்டாயம்தானே ஏற்படுத்தப்பட்டது? அவர்களுக்கான ரயில் ஏற்பாடுகள் இத்தனை நாட்களுக்குப் பிறகு இப்போதுதானே நடைமுறைக்கு வந்திருக்கிறது?

அப்படியும் முழு நம்பிக்கை ஏற்படாதவர்களாகத் தண்டவாளத்தின் வழியே நடந்து போனவர்களில் 16 பேர் ரயிலில் அடிபட்டுச் சாவார்கள் என்று அவர்களுடைய ஜாதகத்திலோ, கைரேகையிலோ சொல்லப்பட்டிருந்ததா என்ன? கால்களின் வலியாலும் பசியின் கிறக்கத்திலும் தண்டவாளத்தில் அசந்து தூங்கிவிட்டது அவர்களின் அறியாமை என்று அவர்கள் மீதே பழி போடலாம்தான். ஆனால், கண்டிப்பாக உங்களை ஊரில் கொண்டுபோய்ச் சேர்ப்போம் என்று உறுதியளிக்கிற கரம் நீளாததற்கு யார் மீது பழி போடுவது? இப்படி எல்லாவகை தொழிலாளர்களையும் கைவிட்டுவிட்டு, ஊரடங்கு வாய்ப்பில் நாட்டின் வலிமையை எப்படிக் கட்டியிருக்க முடியும்? கார்ப்பரேட்டுகள் மட்டுமே நாடு இல்லையே!

குடிமக்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, குடியை மறக்க முடியாதவர்களுக்காவது ஏதாவது செய்யலாம் என்று நினைத்தோ என்னவோ, ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுவதற்கு முன்பாகவே மாநிலங்களில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. மாநில அரசுகள் இந்த வழியில் தங்களுக்கான நிதியைத் திரட்டிக்கொள்வதற்கான மதுக்கடை அனுமதி எப்படி நாட்டின் வலிமையைத் திரட்ட வழி செய்யும்?

வேறு யாராவது சொன்னார்களா?

கொரோனா போராட்டத்தை வலுவாக நடத்திய, நடத்திக்கொண்டிருக்கிற வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் இனி மக்கள் கிருமியோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னதாகச் செய்தியில்லை. ஒரு நாடு அப்படிச் சொல்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கக்கூடும். நோயைப் பெருமளவுக்குக் கட்டுப்படுத்திவிட்டதால் இனிமேல் மோசமான பாதிப்புகள் இருக்காது. ஆகவே, கிருமியோடு வாழப்பழகலாம் என்ற துணிவு ஒரு காரணம். இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை, இதுவரை மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆகவே, கிருமியோடு வாழப் பழகலாம் என்ற கைவிரிப்பு இரண்டாவது காரணம். சுகாதாரத்துறை இணைச்செயலர் இவ்வாறு கூறியிருப்பதன் பின்னால் இருப்பது எந்தக் காரணம் அல்லது மூன்றாவதாக ஒரு காரணம் இருக்கிறதா? மக்களோடு வெளிப்படையாக இருக்கிற அரசிடமிருந்துதான் இந்தக் கேள்விக்கான பதிலை எதிர்பார்க்க முடியும் என்பதும் உண்மையே.

மக்களிடம் வெளிப்படையாகச் சொன்னதெல்லாம் கைதட்டுங்கள், பாத்திரங்களைத் தட்டுங்கள், அகல்விளக்கு ஏற்றுங்கள், மெழுகுவத்தி ஏற்றுங்கள் என்ற வேண்டுகோள்கள்தான். மக்களிடம் வெளிப்படையாகக் காட்டியதெல்லாம் மருத்துவமனைகள் மீது பூச்சொரியல்தான். இப்படிச் சடங்குமயமாக்குவது ஏன் என்று விமர்சித்தவர்களும் உண்டு. இதற்கெல்லாம் உணர்வுபூர்வமாக ஒத்துழைத்தவர்களும் உண்டு. இதெல்லாம் கொரோனா சிகிச்சையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தன்னார்வலர்களுடன் தேசத்தின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவே என்றார் பிரதமர். ஆனால், தொற்றிலிருந்து குணமாகி நலமடைந்தவர்கள் அதிகரித்துவருவதாக அரசாங்கப் புள்ளிவிவரமே காட்டுகிறதே… அதற்குக் காரணமான இவர்களைத் திகைக்க வைப்பதாக அல்லவா “கிருமியோடு வாழப் பழகுவது” என்ற அறிவுரை வந்திருக்கிறது?

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தவும், நோயை ஒழிக்கவும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளிலும் முயற்சிகளிலும் இனி முழு அக்கறை செலுத்தப்படாதோ என்ற எதிர்மறையான எண்ணம்கூட இந்த அறிவுரையால் ஏற்படக்கூடும்.

நடத்தை மாற்றம்

கிருமியிடமிருந்து ஒவ்வொருவரையும் காப்பாற்றுவதற்கான வழிகாட்டல்கள் சமூகத்தில் ஒரு நடத்தை மாற்றமாகக் கடைப்பிடிக்கப்படுவது முக்கியம் என்று இணைச்செயலர் கூறியிருப்பதன் பொருளென்ன? சமூகம் இதற்குப் பொறுப்பாக்கப்படுகிறது, அரசாங்கம் பொறுப்பேற்காது என்று இதை எடுத்துக்கொள்ளலாமா? சமூக நடத்தையில் மாற்றம் தானாக ஏற்பட்டுவிடாது, தற்காலிக ஊரடங்காலும் வந்துவிடாது. சமூக அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடையே வளர்ப்பதுதான் நம்பகமான வழி.

அதென்ன சமூக அறிவியல்?

ஏற்கெனவே 1000 ஆண்டுக் கால சாதியக் கட்டமைப்பால் சமூக விலக்கல் நடத்தை இங்கே கெட்டிப்பட்டுப் போயிருக்கிறது. அதுவும் நோய்த்தடுப்புக்கான சமூக விலகல் நடத்தையும் ஒன்றல்ல என்று புரியவைப்பது ஒரு சமூக அறிவியல். இனியேனும் சமூக விலக்கல் நடத்தையை நாடு முழுவதும் விட்டொழிக்கக் கற்பிப்பது ஒரு சமூக அறிவியல். இப்போதுகூட, கொரோனா வருகையை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சம்பந்தப்படுத்துகிற இழிவான சமூகவிலக்கல் நடத்தை ஒன்று முளைவிட்டதே? உலகளாவிய எதிர்வினையால் அது விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றாலும், அதற்கு இங்கே அனுமதியில்லை என்ற கறாரான அறிகுறிகள் அரசாங்கத் தரப்பிலிருந்து வரவில்லையே? கிருமிகள் தொற்றுவதும் பரவுவதும் ஏன் என்ற உயிரியல் பாடங்கள் மக்கள் மொழியில் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டுப் பொதுப்புத்தியில் பதியமிடப்படுவது ஒரு சமூக அறிவியல். கொரோனாக்கிருமி ஒரு தெய்வக் கோபம் என்று விசேஷ யாகம், சிறப்புத் தொழுகை, ஆசீர்வாத ஜெபம் என்று ஆளுக்காள் கிளம்புகிறார்களே, அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்வது ஒரு சமூக அறிவியல். இத்தகைய பிரச்சினைகளில் பொது சமூகத்தின் தேவைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்கிறது என்று உண்மையாகக் காட்டுகிற வகையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிற ஜனநாயக அணுகுமுறை ஒரு சமூக அறிவியல்.

எண் சாண் தேகத்துக்கு சிரசே பிரதானம். எத்தனையோ பிரிவுகள்கொண்ட தேசத்துக்கு அரசே பிரதானம். நடத்தை மாற்றத்துக்கான முன்னுதாரணத்தைத் தன்னிடமிருந்தே தொடங்குவதற்கு அரசாங்கம் பழகுகிறபோதுதான், சமூகம் அதைப் பின்பற்றப் பழகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share