பொங்கல் பரிசு தொகை எப்போது?

Published On:

| By Selvam

people expect pongal gift

கடந்த டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட கன மழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு சார்பில் நிவாரண தொகையாக ரூ.6000 வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில், பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

புதுச்சேரியில் பொங்கலுக்கு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அம்மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் அது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்தநிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலப் புத்தாண்டு நாளை (ஜனவரி 1) பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும். ஏழை மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என்றாலும், பொங்கலுக்கு படைக்கப் பயன்படும் செங்கரும்பை சாகுபடி செய்யும் உழவர்களுக்கு நல்ல விலை கொடுத்து அதை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதும் காரணமாகும்.

பொங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனவரி முதல் வாரத்தில் பரிசுத் தொகுப்பை வழங்கும் பணி தொடங்கி விடும். கடந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் நாள் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி 2-ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பரிசுத் தொகுப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. அதைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் உழவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. அப்போதும் கூட செங்கரும்பு கொள்முதலுக்கு நடைமுறைக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், உழவர்கள் தாங்கள் விளைவித்த கரும்புகளை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் பெரும் இழப்புக்கு ஆளாயினர்.

எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புத்தாண்டில் 5 உறுதிமொழிகள்: மோடி வேண்டுகோள்!

கிறிஸ்துமஸ் தீவில் 2024 பிறந்தது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share