ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதிய விவரங்களை வாட்ஸ்அப் செயலி மூலமும் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது ஓய்வூதிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன், அது குறித்த விவரங்களை குறுந்தகவல், இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்துமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த சமூக வலைதள வசதிகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வரவு வைத்தவுடன், ஓய்வூதிய விவரத்தை உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர ஓய்வூதிய தொகை, வரி விலக்குகள் (இருந்தால்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய செயலாக்க மையங்களுடன் கடந்த மாதம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத்துறை கூறியுள்ளது. இதன்மூலம் இனி, ஓய்வூதியம் குறித்த விவரங்களை வாட்ஸ்அப் மூலமும் பயனாளிகள் இனிமேல் பெற முடியும்.
ஏற்கெனவே தமிழக அரசால் இயங்கும் நிதித்துறை – கருவூல கணக்கு ஆணையரகம் – ஓய்வூதியர்கள் தரவு தளம் https://tnpensioner.tn.gov.in/pensionportal/ என்ற லிங்க்கில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் பெற்ற விவரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்துப் பெறல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப்பயன்கள் வங்கியில் வரவு வைக்கப்பட்டது போன்ற விவரங்களை கருவூலங்களை அணுகாமலே இத்தரவுதளத்தில் பெறலாம்.
மேலும், அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அகவிலைப்படி மற்றும் இதர பயன்களை அறிந்துகொள்ளலாம். மேலும் ஓய்வூதியர் வாழ்நாள் சான்று அளித்த விவரம், 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விவரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முன்பணம், புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் குடும்பநல நிதி பிடித்தங்கள் போன்ற விவரங்களை தங்களது ஓய்வூதிய எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
**-ராஜ்**
.
