நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச முதல்வர் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில், ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனிடையே பல்கலைக் கழங்கள் தொடர்பான 10 மசோதாக்களை அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதையடுத்து கடந்த நவம்பர் 10ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூடி, இந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்தது.
அதில், சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். அதனை திருப்பி அனுப்பவோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ கூடாது. ஆனால் வேண்டுமென்றே ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 13) மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மசோதாக்கள் நிலுவையில் இருப்பது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் சந்தித்து பேசத் தயார் என்று அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அரசு மனுத் தாக்கல் செய்தவுடன் அவசர அவசரமாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இதை எப்படி ஏற்றுக் கொள்வது?. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் ஒவ்வொருமுறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர்ப்பார்ப்பது ஏன்? எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்குமா? என்று கேள்வி எழுப்பியது.
“ஆளுநர் தாமாக முன்வந்து முதல்வரை சந்தித்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆளுநர் தரப்பிலிருந்து ஏதாவது சில முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதல்வரும் ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றும் கூறியது.
இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தை அட்டர்னி ஜெனரல் கவனிக்கும்படி அறிவுறுத்துகிறோம் என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு விசாரணையை ஜனவரி 3ஆம் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாடாளுமன்ற தாக்குதல்: கைதானவர்களின் சொந்த ஊர்களுக்கு விரைந்தது புலனாய்வு துறை!
மழை, வெள்ளம்..யார் யாருக்கெல்லாம் நிவாரணம்? – அரசாணை வெளியீடு!









