கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது இன்று (ஏப்ரல் 12) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நேற்று (ஏப்ரல் 11) சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதியில் இரவு 10.40 மணிக்கு பிரச்சாரம் செய்வதற்காக அண்ணாமலை தாமதமாக வந்தார். இதனைடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய அனுமதிக்ககூடாது என்று காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.
உடனடியாக அண்ணாமலை அங்கிருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து அங்கிருந்த பாஜக மற்றும் திமுக, மதிமுக, சிபிஎம் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆனந்தகுமார், மாசானி உள்ளிட்டோர் மீது 294 பி, 323, 147 ஆகிய பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், “கோவை அமைதியான நகரம். பாஜக இங்கு எந்த நேரத்திலும் கலவரத்தை உண்டாக்கலாம் என்ற ஐயம் எங்களுக்கு இருக்கிறது.
தமிழகம் முழுவதும் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பாஜக வேட்பாளர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். கோவையில் அவர்களது மிரட்டல் எடுபடாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: இரண்டு பேர் கைது!
RCB Vs MI: ஆர்சிபி தோற்க ‘அம்பயர்’ தான் காரணம்… ‘ஆதாரம்’ பகிரும் ரசிகர்கள்!
