விளைச்சல் உச்சம்: விலை குறைவு- தென்னை விவசாயிகள் கவலை!!

Published On:

| By Kavi

தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் உச்சம்தொட்ட நிலையில், விலை குறைந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இளநீர், கொப்பரை, உடை தேங்காய் என்ற வகையில் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய்களுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் வெளிமாநில வியாபாரிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு நேரடியாக வந்து, விவசாயிகளிடம் தோட்டங்களிலேயே தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து லாரிகளில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.  

ADVERTISEMENT

தமிழகத்தில் தேங்காய் சாகுபடியில், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் உள்ளன.

அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த மாதம் ஒரு தேங்காய் ரூபாய் 10 முதல் ரூபாய்  25 வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் அதிக அளவு விற்பனைக்கு வருவதால் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு குறைந்த விலையே கிடைக்கிறது.

மேலும் தமிழகத்தில் இருந்து தேங்காயை, பிற மாநிலங்கள் எதிர்பார்ப்பது இல்லை. இதனால் தமிழகத்தில் தேங்காய் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளன. மண்டிகளில்  மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

Peak yield and low price coconut farmers worried

இந்த நிலை குறித்து பேசியுள்ள தேங்காய் வியாபாரிகள், “கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அத்துடன் வரத்தும் வரலாறு காணாத அளவுக்கு உள்ளது. இதனால் எதிர்பார்த்த அளவு தேங்காய்களுக்கு விலை கிடைக்கவில்லை.

தென்னந்தோப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி குத்தகை அடிப்படையில் மரங்களை எடுக்கிறோம். தேங்காய் பறிப்பது, லாரியில் எடுத்து வருவது, அவற்றை பராமரித்து மூட்டையாகக் கட்டி விற்பனைக்கு அனுப்புவது என ஒரு தேங்காய்க்கு ரூபாய் 13 வரை செலவாகிறது.

சீசன் காலங்களில்  ரூபாய் 15 முதல்  ரூபாய்  25 வரை விலை போகும். தற்போது வியாபாரிகள் தேங்காய் ஒன்றை 10 ரூபாய்க்குக் கேட்கிறார்கள். இதனால் எங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ததால் மட்டுமே, எங்களுக்கு வருவாய் கிடைக்கும். இல்லை என்றால் பெருத்த நஷ்டமே மிஞ்சும். மேலும் தேங்காய் பறித்து உரித்துவிட்டால் இரண்டு மாதங்கள் வரை அழுகாமல் தாக்கு பிடிக்கும். அதனால்தான் எங்களால் ஓரளவு தேங்காய் தொழிலில் தாக்கு பிடிக்க முடிகிறது.

வழக்கமான கோயில்கள் மற்றும் திருமண விழாக்கள் இதர பண்டிகைகள் நடைபெற்றால்தான், தேங்காய் விற்பனையில் மீண்டும் பழைய நிலையை அடைய முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது கோடைக்காலம் என்பதால் சிலர் தேங்காய் முற்றும் முன்பே இளநீராகப் பறித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றை வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கிச்செல்கிறார்கள்.

கோடை வெயிலுக்கு முன்பு இளநீர்  ரூபாய் 15 முதல்  ரூபாய்  20 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது  ரூபாய்  25 முதல்  ரூபாய் 40 வரை அங்குள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

அக்கவுண்ட் லாக் ஆனதாக வரும் எஸ்எம்எஸ்: உண்மை நிலை என்ன?

நீலகிரி: ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்குத் தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share