இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 15 முறைக்கு மேல் கூறிவிட்டார். அதே போல தான் அமித்ஷா கூட்டணி ஆட்சி என கூறுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். pe shamugam compare amit shah with trump
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை 12) கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சண்முகம், “அமித்ஷா அநேகமாக 5வது முறையாவது கூட்டணி ஆட்சிதான் என்று கூறியிருக்கிறார் என நினைக்கிறேன். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 15 முறை சொல்லிவிட்டார்.
அதுபோல அமித்ஷா தேர்தல் முடிவதற்குள் ஒரு 100 முறையாவது தமிழ்நாடில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும்.
நிச்சயமாக பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதகத்தை உண்டாக்கும் நடவடிக்கையாக இருக்கும். கூட்டணியில் சேர கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிகளையெல்லாம் அழித்தொழிப்பது, தனது எதேச்சதிகாரத்தை நடைமுறைப்படுத்துவது என்பதுதான் பாஜகவின் வழக்கமான நடைமுறையாக உள்ளது.
இதற்கு மகாராஷ்ரா, பீகார் போன்ற மாநிலங்கள் முன்னுதாரணமாக உள்ளது. அப்படி ஒரு நிலைமை தமிழ்நாட்டிற்கு வர கூடாது. வராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏனென்றால் தமிழ்நாட்டில் அதிமுக – பிஜேபி கூட்டணி வெற்றி பெற கடுகளவு கூட வாய்ப்பே கிடையாது.” இவ்வாறு அவர் கூறினார்.
