‘கார்ட்டூன் என்பது யாருக்கானது?’ என்பதுதான் உலகின் மிகப்பெரிய கேள்வி. ‘என் பிள்ளை எனக்கு என்னிக்குமே குழந்தைதான்’ என்று சொல்லும் அம்மாகூட, ‘என்னடா சின்ன புள்ளை மாதிரி கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருக்கே’ என்று சட்டென நம் மனதை உடைத்துவிடுவார்கள். தற்போதைய உலகத்தில் கார்ட்டூன்களுக்கு அடுத்த இடத்தில் அமர்ந்துகொண்டிருப்பவை, அனிமேஷன் படங்கள். கவனித்தீர்களா? அடுத்த இடத்தில்தான். கார்ட்டூனின் இடத்தை அனிமேஷன் பிடிக்கவில்லை. பிடிக்கவும் முடியாது. குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கார்ட்டூன்களை, அந்தக் குழந்தையின் மனதுடனே தான் பார்க்க வேண்டும். குழந்தையின் மனது என்றால் பால் புட்டி, பார்பி பொம்மை, அம்மாவின் கழுத்திலிருக்கும் சங்கிலி இவை அல்ல. அதீத எதிர்பார்ப்புகளின்றி சப்ஜெக்டை மட்டும் கவனிப்பது.
இளம் வயதில் வெள்ளை பூசப்பட்ட தளத்தை பார்த்துக்கொண்டே தூங்கிப்போகும் நாம், சிறு வயதில் முகத்துக்கு நேராக சுற்றிக்கொண்டிருக்கும் ஏதாவதொரு விளையாட்டுப் பொருள் இல்லாமல் தூங்கியதே இல்லை என்பதை அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? அம்மாவிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏனென்றால், விளையாட்டுப்பொருள் வாங்கித்தரும் அளவுக்கு பொருளாதார சூழல் இல்லாத குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அம்மாவின் முகம்தான் விளையாட்டுப் பொருள் முதற்கொண்டு எல்லாமே.

வயது அதிகமாகும்போது நமது தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புவதுதான், குழந்தைத்தனத்திலிருந்து மனித இனம் சீக்கிரம் விடுபட்டுவிடும் காரணம். சிறு வயதில் நீண்ட நேரம் ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை, ஒருநாள் அங்கு சென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசைப்பட்டியலில் சேர்ப்பதைத்தான் எதிர்பார்ப்பு என்கிறேன். நேற்று எழுதிய Cars 3 படத்தையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
Cars 3 திரைப்படத்தைப் பார்க்கும்போது ஒரு ரசிகனுக்கு என்ன எதிர்பார்க்கத் தோன்றும்? கார் டயர் தரையில் உராயும்போது சிதறும் துகள்கள் தெரியுமளவுக்கு கிராஃபிக்ஸ் இருக்க வேண்டும். ரேஸ் நடந்துகொண்டிருக்கும்போது, ஸ்கிரீனின் ஓரம் தெரியும் பார்வையாளர்கள் ஆர்ப்பரிப்பது தெரிய வேண்டும் என்ற அளவுக்கு துல்லியமான ஒரு மேக்கிங் அதற்குத் தேவைப்படுகிறது. ஏனென்றால், Cars திரைப்படங்களின் ரசிகர்கள் இப்போது டீனேஜ்களில் இருக்கிறார்கள் என்று நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தோம். ஆனால், இந்த விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது Despicables Me 3.

Despicables Me 3 திரைப்படம் மிகவும் எளிதாக ஊகிக்கக்கூடிய திரைக்கதையைக் கொண்டது. 1980-களில் தொலைக்காட்சியில் வில்லனாக வந்து ஹாலிவுட் குழந்தைகளின் ஹீரோவாக மாறிப்போனெ ஒரு நடிகன், அவனது இளம் வயதில் யாராக இருப்பான்? அதே எண்பதுகளில் நிஜ உலகில் வில்லனாக இருப்பவன். எப்படி இருப்பான்? என்று கேட்டால், அந்த ஹீரோ ஒரு சூப்பர் ஸ்டாராக மாறி ஹாலிவுட்டையே கலக்குவான். அந்த வில்லன் மிகப்பெரிய கேங்க்ஸ்டராக மாறி அமெரிக்காவையே ஆட்டிப்படைப்பான் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால், படத்தில் அந்த ஹீரோ, தன்னை நிராகரித்துவிட்ட ஹாலிவுட்டைப் பழிவாங்க மிகப்பெரிய ரோபோட்டுடன் வருகிறான். தனக்கென யாருமில்லாததால் கெட்டவனாக இருந்தவன், டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சேர்ந்து அந்தக்கெட்டவனை அழிக்கச் செல்கிறான். இது குழந்தைகள் உலகம். இங்கு டோரா புஜ்ஜிகள் பேய்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றும், அந்தக் குழந்தையுடன் சூப்பர்மேன் படுத்துறங்கும். இங்கு முக்கியம் கேரக்டர் அல்ல. அது குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறதென்பது தான் முக்கியம்.
Despicables Me 3 திரைப்படத்தில், விவாகரத்து வாங்கிக்கொண்டு ஆளுக்கொரு குழந்தையாக பிரித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்ட பெற்றோர்களைப் பற்றிப் பேசவில்லை. அந்த இரு குழந்தைகளும் அப்பா, அம்மாவை சார்ந்து இல்லாத காலத்தில் எப்படி ஒருவரையொருவர் வரவேற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறது. மிகவும் சுலபமாக விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து சென்றுவிடும் சமூகச்சூழலைக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இப்படிப்பட்ட கதைகள் மிக முக்கியமானவை. தனது சொந்த நாட்டில் தினந்தோறும் நடைபெறும் பிரச்னையைப்பற்றிப் பேசும்போதும், அதை ஓர் உலகப்படமாக முன்நிறுத்த டிஸ்னி கையாளும் யுக்திதான் மகளின்மீதான பாசம்.

தத்துப்பிள்ளையாக இருந்தாலும், தன்னை ரிட்டயர்ட்மெண்ட் வாங்கி வீட்டுக்குள் பார்க்கப் பிடிக்காத ஒரு மகளுக்காக தனது வேலையை மீட்கப் போராடுகிறான் கதாநாயகன். அப்பாவுக்கு வேலை போய்விட்டது என்று தெரிந்ததும், தனது பொம்மைகளை விற்று பணம் கொடுக்கும் குழந்தைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும்போது சிறுவயதில் பிரிந்த உடன் பிறந்தவன் அழைக்கிறான். அவனுடன் சேர்ந்து இழந்த வேலையை மீட்கப் போராடுகிறான் கதாநாயகன். இவ்வளவுதான் கதை. மிகவும் சிறிய அளவிலான கதாபாத்திரங்கள் என்பதால், இந்த சப்ஜெக்டுகளை பிரதானமாக வைத்துவிட்டு, பின்னணியில் துல்லியத்தன்மையைக் கொஞ்சமும் தேடாமல், அதேசமயம் கண்களை உறுத்தாமல் சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறது டிஸ்னி.

இந்த கேரக்டர்களையடுத்து படத்தில் முக்கியத்துவம் பெறுபவை மினியன்ஸ். அனிமேஷனில் ஆட்சி செய்த படங்களுக்கெல்லாம் பிறகாக வந்தாலும், இவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்ததற்குக் காரணம் அர்த்தமில்லாத மினியன்ஸ். அவற்றுக்கு விளக்கம் கொடுக்க எவ்வளவு சீரியஸாக வேண்டுமென்றாலும் செல்லலாம். **எல்லோரா குகைகளின் தரைகளுக்குக் கீழே கிட்டத்தட்ட ஒரு அடி அளவில் இடைவெளி இருக்கும். மேல் தரையிலிருந்து அந்த இடைவெளியை நோக்கி இருக்கும் துளைகள், கீழே நடந்து சென்று முனிவர்களுக்கு வேண்டிய வேலைகளைச் செய்த குள்ள மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்டது** என்று சொன்னால் சிலர் உண்மை என்று நம்புவார்கள். சிலர் உண்மையா என கூகுளில் தேடுவார்கள். சிலர், எங்கிட்டயே ரீல் விடுறியா? என அலுவலகத்துக்கு ஃபோன் செய்துவிடுவீர்கள். ஆனால், இங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது உண்மை என நம்பிவிடும் சிலர்தான். பிறகு, இது பொய் எனத் தெரியவரும்போது மின்னம்பலத்தின்மீதும், என் மீதும் வரும்கோபம் கட்டுக்கடங்காததாக இருக்கும். அதேமாதிரியானவர்கள் தான் குழந்தைகள்.

அவர்கள் நேசிக்க எந்த வரைமுறையும் தேவையில்லை. ஏன் உயிர் இல்லாத பொம்மைகளுக்குக்கூட உயிர்கொடுத்து பேசிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கான ஒரே மொழி அன்பு மட்டும்தான். அதை உணர்த்தவே மினியன் கேரக்டர்களுக்கென தனிமொழியைக் கொடுத்திருக்கிறார்கள். கதாநாயகனைப் பிரிந்துசென்றுவிட்டு, அவை நினைத்துப்பார்ப்பது அவர்கள் பரிமாறிக்கொண்ட வார்த்தைகளை அல்ல. அந்த இரு தரப்பும் பகிர்ந்துகொண்ட அன்பு பற்றி மட்டும்தான் மினியன்ஸ் நினைவுகூறும். அப்படிப்பட்டவர்கள்தான் குழந்தைகளும். அவர்கள் உலகத்தில் கோபமும், அழுகையும் நிலையற்றது. அன்பு மட்டும்தான் நிலையானது. அந்த அன்பைப் பகிர்ந்துகொள்ளவே இப்படி குழந்தைகளைப் மையப்படுத்தி அனிமேஷன் படங்கள் எடுக்கப்படுகின்றன. அவற்றைக்காட்டி, அவர்களாகவே புரிந்துகொள்ளும் விஷயங்களைத்தவிர வேறெதையும் அவர்கள் உலகில் யாராலும் விதைத்துவிட முடியாது.
– சிவா
[Cars 3: பெண் குழந்தை எனும் நம்பிக்கை ஒளி!](https://minnambalam.com/k/2017/07/06/1499279419)
