ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் 106 நாள் சிறைவாசத்துக்குப் பின் நேற்று (டிசம்பர் 4) இரவு 8 மணிக்கு திகார் சிறையில் இருந்து வெளியேவந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, “இந்த வழக்கு குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. உச்ச நீதிமன்றஉத்தரவுக்கு நான் கீழ்ப்படியப் போகிறேன், வழக்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால் உண்மை என்னவென்றால், 106 நாட்களுக்கு முன்பிருந்து, இப்போது வெளியே வந்து நான் உங்களுடன் பேசும்வரை ஒரு குற்றச்சாட்டு கூட என் மீது சுமத்தப்படவில்லை. என் மீது ஒரு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை. அதைப் பற்றி நாளை நான் பேசுவேன்” என்று கூறினார்.
**கைகுலுக்கிய திமுக எம்.பி.க்கள்**
பின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய சிதம்பரம், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். அவர் வந்தபோது நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு எதிராகவும், ‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடும் குடும்பத்தில் பிறக்கவில்லை’ என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்காகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிதம்பரத்தைக் கண்டதும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகம் அடைந்தனர். சிதம்பரத்தை வரவேற்று கை குலுக்க ஆரம்பித்தனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் சிதம்பரத்தின் கையைப் பிடித்து வரவேற்றனர். ‘எப்படி இருக்கீங்க? ஹெல்த் பரவாயில்லையா?’ என்று டி.ஆர் .பாலு கேட்க கையைப் பிடித்து புன்னகைத்தார் சிதம்பரம். அதன் பின் அங்கேயே வெங்காய விலை உயர்வுக்கு எதிராக காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்திலும் பங்கெடுத்தார். நாடாளுமன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட ப.சிதம்பரம் வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி மொய்த்தனர்.
“இன்று 12.30க்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விரிவாகப் பேசுகிறேன்”
என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் சிதம்பரம்.
அதன்படியே இன்று பகல் 12.30க்கு மேல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம்.
“ஆகஸ்டு 21 ஆம் தேதி சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்திகள் வந்த நிலையில், இதே இடத்தில்தான் அன்று இரவு பிரஸ்மீட் செய்தார் சிதம்பரம். அன்று பேசிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில்தான் கைது செய்யப்பட்டார்” என்று மூன்று மாதம் முன்பு நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார் டெல்லி ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர். சில பத்திரிகையாளர்களிடம் நலம் விசாரித்துவிட்டு பேச ஆரம்பித்தார் ப.சி.
**திறமையற்ற அரசு, மௌன பிரதமர்**
அமைச்சராக இருந்தபோது எனது பணிகள் மற்றும் எனது மனசாட்சி முற்றிலும் தெளிவாகவே இருந்தன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள். என் குடும்பம் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறது. நீதிமன்றங்கள் இறுதியில் நீதியை வழங்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு மேல் வழக்கு பற்றி எதுவும் பேச முடியாது. இப்போது நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையான பொருளாதாரத்துக்கு வருகிறேன் ” என்று சொல்லிவிட்டு மத்திய அரசு மீது தனது அட்டாக்கை ஆரம்பித்தார் சிதம்பரம்.
கடந்த ஆறு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதங்களையும் பட்டியலிட்டவர், “மத்திய அரசாங்கம் பொருளாதாரத்தில் திறமையற்ற மேலாளராக மாறிவிட்டது. பிரதமர் பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறான மௌனம் காத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை மௌனசாமி என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இப்போதைய பிரதமர் மோடி பொருளாதார விவகாரத்தில் மௌனம் காக்கிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ப.சி.
அரசாங்கம் தற்போதைய மந்தநிலையை ‘சுழற்சி ’என்று அழைக்கிறது. நல்லவேளை பொருளாதார மந்த நிலை ஒரு சீசன் என்று அவர்கள் சொல்லாமல் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இது கட்டமைப்பு ரீதியான சிக்கல். இந்த கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்கும் தீர்வுகள் அல்லது சீர்திருத்தங்கள் அரசாங்கத்திடம் இல்லை. இனி இந்த அரசால் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க முடியாது. காங்கிரசும் வேறு சில கட்சிகளும் பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து வெளியேற்றுவதற்கும் பொருளாதார வளர்ச்சியைத் தருவதற்கும் சிறந்தவை என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த சிறந்த காலத்துக்காக நாடு காத்திருக்க வேண்டும்” என்றார் ப.சி. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை பிப்ரவரி 2019 இல் இருந்து தொடர்ந்து வரலாறு காணாத வகையில் குறைத்து வருவது பற்றி வியப்பு தெரிவித்தார் ப.சிதம்பரம்.

சிதம்பரத்தின் பிரஸ்மீட் இன்று முழுதும் ஊடகங்களால் விவாதிக்கப்படும் நிலையில், “ப.சிதம்பரம் அவரது ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார்” என்று மழுப்பலான பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
**சென்னை வரும் சிதம்பரம்**
இதற்கிடையே இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். 106 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையான சிதம்பரம் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறார் . இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “ சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள ப.சிதம்பரம் மிகுந்த மனவலிமையையும், துணிவையும் பெற்றிருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த காலங்களில் பா.ஜ.க. அரசை எதிர்த்து எத்தகைய ஏவுகணைகளை தொடுத்தாரோ, அதைவிட மிக வலிமையான முறையில் ப. சிதம்பரம் அவர்கள் அரசியல் பேராண்மையோடு விமர்சனங்களை மேற்கொள்வார் என நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவர் மீது இருந்த நம்பகத்தன்மை இன்று பல மடங்கு கூடியிருக்கிறது. நாம் கொடுக்கிற மாபெரும் வரவேற்பு ப. சிதம்பரம் அவர்களுக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிற வகையில் அமைய வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற ப. சிதம்பரத்துக்கு அளிக்கிற வரவேற்பு காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையமே திணறியது என்கிற செய்தி வருகிற வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ணக் கொடியோடு அணி திரண்டு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிதம்பரம் சிறப்புரையாற்ற இருக்கிறார். மறுநாள் 8 ஆம் தேதி திருச்சிக்கு விமானத்தில் சென்று தமது சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
**மோடி உருவாக்கிய காங்கிரசின் பிரச்சார பீரங்கி**
“மோடியின் இரண்டாம் ஆட்சிக் காலம் ஆறு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையில், அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கூர்மையான விமர்சனங்களை வைப்பதில்லை. வைத்தாலும் அறிமுகமில்லாத தலைவர்களின் விமர்சனம் எடுபடுவதில்லை. இந்நிலையில் ப.சிதம்பரத்தை மோடி அரசு 106 நாட்கள் சிறை வைத்ததன் மூலம் சிதம்பரத்துக்கு முன்பைவிட அதிக ஊடக வெளிச்சமும், பொதுமக்கள் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.
இதை வைத்தே மோடி அரசின் பொருளாதார அவலத்தை உரித்துக் காட்ட ப.சிதம்பரத்தை இந்தியா முழுக்க பயன்படுத்த சோனியா காந்தி திட்டமிட்டிருக்கிறார். சிறைவாசத்தால் ஏற்பட்ட உடல் நலக் குறைவை போக்க சில நாட்கள் ஓய்வெடுத்த பின், மத்திய அரசுக்கு எதிரான பொருளாதாரப் பிரச்சினைகளை சிதம்பரம் தனக்கே உரிய மக்களுக்குப் புரியும்படியான பாணியில் இந்தியா முழுதும் சென்று பேச இருக்கிறார். மோடி தனக்கு எதிரான ஆயுதத்தை தானே தயாரித்து எங்களுக்கு வழங்கிவிட்டார். இனி பாருங்கள்” என்கிறார்கள் டெல்லியில் நடப்பதை அறிந்த காங்கிரஸ் பிரமுகர்கள்.
