முதலில் பேட்டிங் செய்து 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், கொல்கத்தாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. PBKS defend the lowest score and win by 16 runs
தனது சொந்த மைதானமான முல்லன்பூரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று (ஏப்ரல் 15) எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக பிராப்சிம்ரன் (30) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (22) மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர்.
கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளும், நரைன் மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களான நரைன் (5) மற்றும் டி காக் (2) அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரகானே (17) – ரகுவன்ஷி (37) ஜோடி 55 ரன்கள் குவித்தது. அப்போது 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்றிருந்த கொல்கத்தா அணி 95 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய 4 விக்கெட்டுகளும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
நம்ப முடியாத இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
🔥ஐபிஎல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் அடித்த குறைந்தபட்ச இலக்கை (111), எதிரணி நெருங்க விடாமல் ஆல் அவுட் (95) செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றது.
🔥நடப்பு ஐபில் தொடரில் மெய்டன் விக்கெட்டுடன் ஓவர் வீசிய 5வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் பவுலர் அர்ஸ்தீப் சிங் பெற்றார்.
🔥முதல் இன்னிங்ஸில் அடித்த குறைந்தபட்ச இலக்கை (111), எதிரணி சேஸ் செய்ய விடாமல் தடுத்த அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் (116/9) அணியிடம் இருந்து தட்டி பறித்தது பஞ்சாப்.
🔥ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியை வீரர் என்ற பெருமையை பெற்றார் யுஸ்வேந்திர சஹால். (8 முறை)