சரிந்த பேடிஎம் நிறுவன பங்குகள்: உணர்ச்சி வசப்பட்ட சிஇஓ

Published On:

| By Balaji

ரூபாய் மதிப்பிழப்புக்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தைத் தொடங்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா தனது நிறுவன பங்குகள் சரிவை கண்டதால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8ஆம் தேதி அன்று பங்குகளை வெளியிட்டது. பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10ஆம் தேதி அன்று முடிவடைந்தது. நேற்று (நவம்பர் 18) பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன. பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.

ஒருகட்டத்தில் அதிகபட்சமாக 27 சதவிகிதம் வரை பங்குகள் சரிந்தன. இதனால் பேடிஎம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் சிஇஓ விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டார்.அப்போது பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவை கண்டதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்ட காட்சி மற்றவர்களையும் கலங்க வைத்தது.

ADVERTISEMENT

இந்த சரிவின் காரணமாக ஒரே நாளில் 38,000 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வர்த்தகத்தை தொடங்கும் முன்பு இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், முதல் நாள் வர்த்தகத்தில் 1.01 லட்சம் கோடியாக மட்டுமே இருக்கிறது.

அண்மையில் வெளியான ஸொமேட்டோ, நைகா நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்த நிலையில், பேடிஎம் பங்கு விலை முதல் நாளன்றே 27 சதவிகிதம் வரை குறைந்திருப்பதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். விலை கொஞ்சம் குறைந்தால் வாங்கலாம் என்று யோசித்தவர்கள்கூட, இப்போது இந்தப் பங்கை வாங்கினால் சரியாக இருக்குமா என்று யோசித்து, ஒதுங்கத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share