சனாதன தர்மத்தை ஒழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள் என்று தன்னை மறைமுகமாக விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது, “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம் ஆகும்” என உதயநிதி பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில், ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், நேற்று திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
“தமிழ்நாட்டில் சிலர், சனாதன தர்மம் ஒரு வைரஸ் மாதிரி அதனை நாசம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன். இந்த மாதிரி நிறையப் பேர் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் முதல் ஆளும் இல்லை. கடைசி ஆளும் இல்லை.
உங்களை மாதிரி ஆட்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.
சனாதன தர்மத்தை யாராவது அழிக்க நினைத்தால், கடவுள் பாலாஜியின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் அழிந்து போவீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” என்று உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விழா முடிவடைந்த பின், பவன் கல்யாண் அவரை விமர்சித்தது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு “ Let’s wait and see (பொறுத்திருந்து பார்ப்போம்)” என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துவிட்டு காரில் கிளம்பிச்சென்றார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
TN-Alert செயலி : என்னென்ன விவரங்களை பார்க்க முடியும்?
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த முக்கிய திட்டங்கள் : முழு விவரம்!
ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவரையும் கொன்றதா இஸ்ரேல்? நிலவரம் என்ன?
Comments are closed.