பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் இன்று (ஏப்ரல் 8) காலை பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக ஜன சேனா கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. pawan kalyan 8yr old son met fire accident
ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். வயது 8. சிங்கப்பூரில் அவர் பயின்று வரும் தனியார் பள்ளிக் கட்டிடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க் உட்பட சுமார் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
தற்போது வரை தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விபத்தில் மார்க்கின் கை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. மேலும் புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும், மார்க்கின் தாயுமான அன்னா லெஷ்னேவா, அருகிருந்து கவனித்து வருகிறார்.

மார்க் விபத்தில் சிக்கிய செய்தியறிந்து, ஆந்திரா முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பவன் கல்யாணை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது மார்க்கின் உடல்நிலையை கண்காணித்து, தொடர்ச்சியான அறிக்கைகளை வழங்குமாறு இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஏற்கெனவே திட்டமிடப்பட்டபடி விசாகப்பட்டினத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விரைவில் சிங்கப்பூருக்கு சென்று சிசிச்சை பெற்று வரும் தன் மகனை பார்க்க உள்ளதாக அவரது கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.