ஸ்டேஷன் மாஸ்டர் குறட்டை விட்டு தூங்கியதால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்ட சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களில் மிகப் பெரிய இந்திய ரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். அத்துடன் இந்திய ரயில்வேயில் 12.54 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இப்படிப்பட்ட துறையில், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது என்பது புதிதல்ல.
சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளாலும், சில சமயங்களில் மோசமான வானிலை காரணமாகவும் ரயில்கள் மணிக்கணக்கில் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ஆனால், ஸ்டேஷன் மாஸ்டர் குறட்டை விட்டு தூங்கியதால், சிக்னல் கிடைக்காமல் அரைமணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்ட சம்பவம் ஆக்ராவில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள உடிமோர் ரயில் நிலையம் இட்டாவுக்கு முன் உள்ள முக்கியமான ரயில் நிலையமாகும்.
ஆக்ராவைத் தவிர ஜான்சியிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாகத் தான் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு பாட்னா-கோட்டா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அப்போது இந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அயர்ந்து உறங்கியுள்ளார். இதன் காரணமாக அந்த ரயில் புறப்படத் தாமதமானது.
இதனையடுத்து ரயிலில் இருந்து பயணிகள், ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். உறங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் மாஸ்டரை எழுப்ப, ரயிலின் லோகோ பைலட் பலமுறை ஹாரன் அடித்தார். ஒருவழியாக தூக்கத்தில் இருந்து எழுந்த ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் ஓட்டுநரிடம் மன்னிப்பு கேட்டார்.
பணியில் இருந்த பாயிண்ட்ஸ் மேன் தண்டவாளத்தைச் சரிபார்க்கச் சென்றதால், ரயில் நிலையத்தில் தான் மட்டும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதன்பின் அந்த ரயில் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!
இடியாப்ப சிக்கலில் சிஎஸ்கே அணி : மீண்டும் ஒரு முக்கிய வீரர் விலகல்!
’கள்ளக்கடல்’ எச்சரிக்கை எதிரொலி : திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை!