டாக்டரை குத்திய நோயாளி: ஐசியூ வாசலில் ஆயுதம் ஏந்திய போலீஸாரை நிறுத்தக் கோரிக்கை!

Published On:

| By christopher

கேரளாவைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை கத்தரிகோலால் நோயாளி ஒருவர் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருநின்றவூரைச்‌ சேர்ந்தவர்‌ பாலாஜி. 34 வயதான இவர்‌, குடல்‌ நோய்க்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்‌.

ADVERTISEMENT

அவருக்கு நேற்று முன் தினம் (மே 29) இரவு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி மருத்துவராக இருக்கும் சூர்யா சிகிச்சையளித்து கொண்டிருந்தார்.

கத்திரிக்கோலால் குத்திய நோயாளி!

ADVERTISEMENT

அப்போது பாலாஜிக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக அவரது கையில் ஊசி செலுத்தப்பட்டு இருந்தது. வலிப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று  மருத்துவர் சூர்யாவிடம், பாலாஜி கூறியுள்ளார்.

ஆனால் சிகிச்சை தொடரவேண்டியிருப்பதால் அதை அகற்ற முடியாது என மருத்துவர் சூர்யா கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பாலாஜி, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாலாஜி, அங்கு இருந்த கத்தரிக்கோலை எடுத்து சூர்யாவின் கழுத்தில், சரமாரியாக குத்தினார்.

இதில் நிலைகுலைந்த மருத்துவர் சூர்யாவை மீட்ட செவிலியர்கள் மற்றும் சக மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு பயிற்சி மருத்துவர் சூர்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  கத்தியால் குத்திய நோயாளி பாலாஜியை போலீசார்‌ கைது செய்தனர்‌.

போராட்டத்தில் இறங்கிய மருத்துவர்கள்!

இதற்கிடையே நோயாளியால் டாக்டர் தாக்கப்பட்ட தகவல் மருத்துவமனை முழுவதும் பரவியது. இதைக் கண்டித்தும், கத்தியால் குத்திய பாலாஜி மீது‌ அரசு மருத்துவமனைகள்‌ பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரியும் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் நள்ளிரவில் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து மருத்துவமனை டீன் டாக்டர் தேரணி ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் பாதுகாவலர்கள் அமர்த்தப்படுவதாகவும், இனி வரும் காலங்களில் மருத்துவர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தேரணி ராஜன் பயிற்சி மருத்துவர்களிடம் கூறினார். மேலும் பாலாஜியை போலீசார் கைது செய்த விவரத்தையும் கூறினார்.

பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவித்து இருப்பதாகவும் அவர் எடுத்து கூறினார்.

போராட்டத்தால் நோயாளிகள் அவதி!

இந்த பேச்சுவார்த்தையில் சமரசம் அடைந்த பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு தங்களது பணியை தொடர்ந்தனர்.

பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் என 3 மணி நேரம் நடைபெற்றது.

போராட்டம் நடைபெற்ற சமயத்தில் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை கிடைக்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

patient attempt murder to his doctor in chennai govt hospital

பாதுகாப்புக்கோரி செயலாளரிடம் மனு!

இதனைத்தொடர்ந்து “பணியில்‌ இருக்கும்‌ டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‌’ என, மக்கள்‌ நல்வாழ்வு துறை செயலாளர்‌ ககன்தீப்‌ சிங்‌ பேடியை சந்தித்து, பயிற்சி டாக்டர்கள்‌ நேற்று மனு அளித்தனர்‌.

இதுகுறித்து, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள்‌ சங்க தலைவர்‌ பாலகிருஷ்ணன்‌ கூறுகையில், ”அரசு டாக்டர்கள்‌ மீதான தாக்குதல்கள்‌ தொடர்கின்றன. எனவே, அரசு மருத்துவமனைகளில்‌ பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்‌. குறிப்பாக, அவசர சிகிச்சை பிரிவு நுழைவாயில்களில்‌, ஆயுதம்‌ ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில்‌ ஈடுபடுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

patient attempt murder to his doctor in chennai govt hospital
கொலை செய்யப்பட்ட டாக்டர் வந்தனா தாஸ் மற்றும் சந்தீப்

கேரளாவைத் தொடர்ந்து சென்னையில்…

கடந்த 10ஆம் தேதி கேரளாவில் இதேபோன்று பயிற்சி டாக்டர் வந்தனா தாஸை சந்தீப் என்ற நோயாளி கத்தரிக்கோலால் கொடூரமாக குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கேரள அரசு, மருத்துவர்களை பாதுகாப்பதற்கு தனி சட்டம் ஒன்றை இயற்றியது.

இந்த சம்பவம் நடைபெற்ற ஒருமாத காலத்திற்குள், தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: டெல்லி விரையும் அமைச்சர் மா.சு.

கேரளாவில் வசூல் சாதனை உறுதி: ’லியோ’ பட உரிமையை கைப்பற்றிய ஃபெயோக்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share