சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (செப்டம்பர் 27) துவங்குகிறது.
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம், செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததால், படம் 2-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்மையில் நடந்த படத்தின் சக்சஸ் மீட்டில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர் சிம்புவுக்கு சொகுசு கார் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசாக வழங்கினார்.

இந்தநிலையில், சிம்பு நடிக்கும் பத்து தல படம் டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மற்றும் சென்னையில் நடைபெற்று வந்தது. வெந்து தணிந்தது காடு திரைப்பட புரோமோஷன் பணிகளில் நடிகர் சிம்பு பிஸியானதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் இன்று சென்னையில் துவங்குகிறது.

இதில் நடிகர் சிம்பு, பிரியா பவானி சங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. சென்னையில் ஒரு வாரம் பத்து தல படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஒரு மாதம் நடைபெறுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டதால், பத்து தல படத்திற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செல்வம்