நாடு முழுவதும் பயணிகள் ரயில் கட்டணம் (Train Fare Hike) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில், ரயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்த ரயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தச் செலவுகளைச் சமாளிக்க, சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதிலும், குறைந்த அளவிலான பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதிலும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இன்று டிசம்பர் 26-ந் தேதி முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
புதிய ரயில் கட்டண உயர்வு:
புறநகர் ரயில்கள் (Suburban) மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் (MST) கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.
215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை.
215 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படும்.
215 கி.மீ-க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம்
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்வு
இதன் மூலம், சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிக்க ரூ15 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
