பட்டுத் துணியிலிருந்து ‘பருத்தி’த் துணிக்குப் போன சோனியா அகர்வால்

Published On:

| By Minnambalam Desk

Paruthi Tamil Movie Pre-Release Event

பாத்ரூமில் டாய்லெட் போனபடியே பல் துலக்கும் நவீன நாகரீக பெண்ணாக அறிமுகமான சோனியா அகர்வாலை, இப்படி கரட்டாங்காடு வழியே, வெயிலில் மறுகும் பெண்ணாக மாற்றிக் காட்டுவதுதானே சினிமாவின் மேஜிக்.

கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், பாரதிராஜாவின் உதவியாளர் குரு எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பருத்தி’.

ADVERTISEMENT

முக்கிய கதாபாத்திரத்தில் மேலே சொன்னது போல முற்றிலும் வேறுபட்ட சோனியா அகர்வால்.

பாரதிராஜாவின் மகன் மனோஜ் K பாரதியை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கியவர் இந்த குரு.

ADVERTISEMENT

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும், சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை யாதார்த்தத்துடனும் சொல்லும் படமாம் இது.

ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ADVERTISEMENT

படப்பிடிப்பு ஓசூர் தேன் கனி கோட்டாவில் நடைபெற்றுள்ளது. படம் வரும் டிசம்பர் 25 அன்று திரைக்கு வருகிறது.

” சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் நச்சு விதையை விதைக்கக் கூடாது என்பதுதான் படத்தின் அடிநாதம் என்கிறார் இயக்குனர்.

பிக்பாஸில் கலந்து கொண்டு தனது ஆட்டத்தையும் ஒழுங்காக ஆடாமல், மனைவி சான்ட்ராவையும் ஒழுங்காக ஆட விடாமல், எல்லோரிடமும் சண்டை போட்டு, மனைவியை கதறி அழ வைத்து விட்டு வெளியே வந்த நடிகர் பிரஜின், “. குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். “என்கிறார் . (வீட்டுக்குப் போய் குழந்தைகளைபத்திரமா பார்த்துக் கொள்கிறேன் என்று சான்ட்ராவிடம் சொல்லிட்டு தானே வந்தீங்க பிக் பாஸை விட்டு வெளியே வந்தீங்க பிராஜின்?)

படத்தை வெளியிடும் ஸ்ரீதர், “நான் இயக்குநர் குழுவில் இருப்பவன் தான். நண்பனோட பயணத்தில் நானும் இருக்க வேண்டுமென நான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறேன். குருவும் நானும் நெருங்கிய நண்பர்கள், இரவு 2 மணிக்கு போன் செய்து என்னிடம் கதை சொல்வார், ரொம்ப ஜாலியாக எல்லோருடனும் பழகுவார். சினிமாவில் அவருக்கும் இன்னும் பெரிய இடம் உள்ளது.”என்கிறார்

தயாரிப்பாளர் சங்கம் ராஜா , “பருத்தி என்றால் பூ. நண்பர் குருவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனை தரட்டும், சோனியா மேடம் இப்படத்தின் மையமாக இருக்கிறார். “என்று சொல்லி விட்டு , ” என் படத்தில் யோகிபாபு நடித்து விட்டு விழாவிற்கு வரவில்லை, அதைப்பற்றி பேசியது பிரச்சனை ஆனது. இதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இசையமைப்பாளர் வரவில்லை என்பது வருத்தம், அவர் சொந்த படத்திற்கு வராமல் இருக்கக் கூடாது. படத்தின் பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். “என்று தனது தரப்பையும் சொல்கிறார்.

இயக்குநர் திருமலை , “தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர் இமயம் பாரதிராஜா அவருடைய உதவியாளர் குரு இயக்கியுள்ள படைப்பு பருத்தி. டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. “என்கிறார்.

நடிகர் ரிஷி, ” சோனியா மேடமை நாம் அழகாக பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் கிராமத்தில் வாழும் ஒரு அம்மாவாக அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் குரு மிக திறமையானவர். நல்ல நடிகர், எல்லா காட்சியையும் அவரே நடித்து காட்டி விடுவார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். நாயகன் புதிதாக நடித்தாலும் அட்டகாசமாக நடித்துள்ளார். நாயகி தமிழ் தெரியவில்லை என்றாலும் அருமையாக நடித்துள்ளார்”என்கிறார்.

நடிகை சோனியா அகர்வால், “பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். “என்கிறார் .

பருத்தி பஞ்சாவே காச்சிருக்கா? இல்ல பஞ்சத்துக்கு காச்சிருக்கான்னு பார்ப்போம்!

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share