“TEENZ” திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புகாரளித்துள்ளார்.
“இரவின் நிழல்” படத்திற்கு பிறகு நடிகர் பார்த்திபன் இயக்கி வரும் படம் “TEENZ”. குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் ஒரு அட்வென்சர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜிகிர்தண்டா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்து கவாமிக் யூ ஆரி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.
பயோஸ்கோப் ட்ரீம்ஸ் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து “TEENZ” திரைப்படத்தை தயாரித்துள்ளன. மேலும், இந்த படத்தின் கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளராக கோவையை சேர்ந்த சிவபிரசாத் பணியாற்றி வந்தார்.
இந்த படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதிக்குள் முடிப்பதாக கூறி இயக்குநர் பார்த்திபனிடம் ரூ.68.50 லட்சத்தை சிவபிரசாத் கேட்டுள்ளார்.
இதையடுத்து, அவருக்கு ரூ.42 லட்சம் செலுத்திய பார்த்திபன் குறித்த நேரத்தில் சிவபிரசாத் பணிகளை முடிக்காததால் ஏப்ரல் 19ஆம் தேதிவரை கால நீட்டிப்பு செய்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 4ல் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடிந்திருந்த சிவபிரசாத், ஏப்ரல் மாதத்திற்குள் முக்கிய காட்சிகளை முடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும், கடந்த ஜூன் 4ஆம் தேதி ரூ.88.38 லட்சம் கேட்டு பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் சிவபிரசாத் தன்னை ஏமாற்றியதாக கோவை பந்தயசாலை காவல்நிலையத்தில் பார்த்திபன் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், சிவபிரசாத் மீது 406/420 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…