அரசு பள்ளிகளில் தங்களை பணிநிரந்தரம் செய்ய கோரி சென்னையில் இன்று ஜூலை 16-ந் தேதி 9-வது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். Teachers Protest
தமிழ்நாடு முழுவதும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்வோம் என 2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பகுதி நேர ஆசிரியர்கள் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக சென்னையில் கடந்த ஜூலை 8-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் முன்பாக நடைபெறும் இப்போராட்டம் இன்று 9-வது நாளாக நீடிக்கிறது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
