நாடாளுமன்ற மக்களவையில் வண்ண புகை குண்டு வீசிய நான்கு பேரை பாதுகாப்பு படையினர் இன்று (டிசம்பர் 13) கைது செய்துள்ளனர்.
மக்களவையில் இன்று பூஜ்ய நேர விவாதத்தின் போது பார்வையாளர் மாடத்திலிருந்து இருவர் குதித்து வண்ண புகை குண்டு வீசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை பிடித்தனர். அதேசமயத்தில், மக்களவை வெளியே மஞ்சள் நிற வண்ண புகை குண்டுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்ட இரண்டு பெண்களையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
பாதுகாப்பு படை விசாரணையில், நாடாளுமன்ற மக்களவை தாக்குல் சம்பவத்தில் ஈடுபட்டது நீலம் , அமோல் ஷிண்டே, சாகர் ஷர்மா, மனோ ரஞ்சன் ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் குறித்து மதுரை சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கூறும்போது, “மக்களவை பாதுகாப்பு மாடத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து விட்டார் என்று தான் முதலில் நாங்கள் நினைத்தோம். பின்னர் இரண்டாவது நபரும் குதித்தார். அவர் அவையிலிருந்த மேஜை மீது ஏறி சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடினார். பின்னர் தனது ஷீவில் இருந்து மஞ்சள் கலர் ஸ்பிரே அடித்தார். அப்போது அவையில் குழப்பமும், பதட்டமும் ஏற்பட்டது.
அவைக்குள் பாதுகாப்பு வீரர்கள் கிடையாது. அவை பணியாளர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர். 15 நிமிடத்திற்கு பிறகு தான் காவலர்கள் அவர்களை பிடித்தனர். இது முழுக்க முழுக்க பாதுகாப்பு குறைபாடு தோல்வி.
பழைய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மாடத்தில் பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருப்பார்கள். மேலும், கேலரிக்கும் நாடாளுமன்ற அவைக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும். புதிய நாடாளுமன்றத்தில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற குண்டு வீச்சு திட்டமிட்ட தாக்குதல்: கனிமொழி குற்றச்சாட்டு!
மக்களவையில் நுழைந்த இருவர் : எம்.பி.க்கள் மீது வண்ண புகை வெடி வீச்சு!