அரசியலமைப்பு தின விழா: மோடி உரை – புறக்கணித்த எதிர்கட்சிகள்!

Published On:

| By Balaji

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற்றது. இதற்காக நாடாளுமன்றத்தின் மைய அவையில் இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சேர்ந்து பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

ADVERTISEMENT

**மோடி உரை**

பிரதமர் மோடி தனது உரையில், “இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். 70 ஆண்டுகளுக்கு முன்பு, நாம் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். இந்திய அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் இரண்டையும் எடுத்துக்காட்டுகிறது. இது நமது அரசியலமைப்பின் சிறப்பு அம்சமாகும். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

ADVERTISEMENT

குறிப்பாக நான், இந்தியாவின் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை ஒருபோதும் குறைந்து விடாதபடி பாதுகாக்கும் 130 கோடி இந்தியர்களையும் தலைவணங்குகிறேன். நமது அரசியலமைப்பை எப்போதும் ஒரு புனித நூலாக, வழி நடத்தும் ஒளியாக கருத வேண்டும். பாபா சாகேப் இன்று இருந்திருந்தால், அவரை விட வேறு யாரும் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் இந்தியா பல ஆண்டுகளாக அவரது கேள்விகளுக்கு பதிலளித்தது மட்டுமல்லாமல், அதன் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை வளப்படுத்தவும் பலப்படுத்தவும் செய்துள்ளது” எனக் கூறினார்.

**காங்கிரஸ் புறக்கணிப்பு**

ADVERTISEMENT

இன்று நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு நாள் விழாவில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில், அரசியலமைப்பு புறக்கணிப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் மற்றும் சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்துகின்றனர். “ஜனநாயகப் படுகொலை” என காங்கிரஸ் கட்சியினர் பதாகைகளுடன் கோஷமிட்டனர்.

காங்கிரஸ் கட்சியுடன், இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், என்சிபி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், திமுக ஆகிய கட்சிகளும் கூட்டுக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. திமுக கொறடா ஆ.ராசா, மக்களவை குழு திமுக தலைவர் டி.ஆர். பாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் சிலை முன் வாசித்தார்.

இன்று நாடாளுமன்றத்தின் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது குறித்து முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங் கூறும் போது, “இது அரசியலமைப்பிற்கு அவமரியாதை அல்ல. தற்போதைய ஸ்தாபனத்தால் அரசியலமைப்பு விதிமுறைகள் மீறப்படுகின்றன என்பது குறித்து அனைவருக்குமான நினைவூட்டல்” என்றார்.,”

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share