பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர்.. நாடாளுமன்ற மக்களவையை முடக்கிய ‘இந்தியா’ கூட்டணி!

Published On:

| By Mathi

Parliament of India

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முதல் நாளான இன்று மக்களவை கூடியதும், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்; பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். சில எம்பிக்கள், சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.

ADVERTISEMENT

இந்த அமளிக்கு இடையே அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் நடைபெற்றன. ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் முழக்கம் தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம், ஜூலை 19-ந் தேதி நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட 8 முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கூட்டாக எழுப்புவது என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என ஆலோசிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share