நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் இன்று (மார்ச் 13) பேச்சுவார்த்தை நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.
எதிர்க்கட்சியான அதிமுக பாமக, தேமுதிக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்துள்ளன.
இந்தநிலையில், நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான்,
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்று தொகுதி பங்கீட்டு குழுவின் உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்வேன் என்று மன்சூர் அலிகான் தொகுதி பங்கீட்டு குழுவிடம் உறுதி அளித்துள்ளதாகவும், வேலூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், தமிழ் தேசிய புலிகள் என்ற தனது கட்சி பெயரை இந்திய ஜனநாயக புலிகள் என்று மன்சூர் அலிகான் மாற்றினார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு மற்றும் கட்சி அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரத்தில் பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய மன்சூர் அலிகான், “நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அறிவிப்பேன்.
ஆரணி தொகுதியில் நான் போட்டியிட உள்ளேன்” என்று தெரிவித்தார். இந்தசூழலில், அதிமுகவுடன் இன்று மன்சூர் அலிகான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate : ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’ கொடுத்த தங்கம் விலை!