‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக் 2’ படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜூலை 11) வெளியாகி கவனம் பெற்றுள்ளது. pariyerum perumal remake dhadak 2 trailer release
இரு வேறு சாதியினருக்கு இடையே உண்டாகும் காதலையும், அதனால் வெளிபடும் சமூகத்தின் கொடூர முகத்தையும் வெளிப்படையாக பேசி வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள்.
2018ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

தமிழில் வெளியான இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கரண் ஜோஹரின் தர்மா புரொடெக்சன் நிறுவனம் வாங்கியது. தற்போது ‘தடக் 2’ என்ற பெயரில் ரீமேக் செய்து உருவாகியுள்ள இப்படத்தில் சித்தாந்த் சதுர்வேதி, திரிப்தி திம்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷாஜியா இக்பால் இயக்கியுள்ள ‘தடக் 2’ திரைப்படம் ஏற்கெனவே சாதி தொடர்பான வசனங்களால் சென்சார் போர்டில் சிக்கலை எதிர்கொண்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகவிருந்த இப்படம் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு தாமதமாகி வந்தது.

சமீபத்தில் படத்தில் இடம்பெற்ற சாதி தொடர்பான 16 வசனங்கள் சென்சார் வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்டு, இப்படத்துக்கு U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து இப்படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
இதனையடுத்து தற்போது படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதில் பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பல காட்சிகள் வணிக நோக்கங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது டிரெய்லரில் தெரிகிறது.
